புது தில்லி: தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருக்கிறது.
தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட தில்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ தொடர்ந்த இரண்டு வழக்குகளிலும் ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். கவாய மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஜாமீன் வழங்கியிருக்கிறது. மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு இன்று ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது திரும்பப்பெறப்பட்ட தில்லி கலால் கொள்கையில் முறைகேடு நடந்ததாகக் கூறி அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், 10 லட்சம் செலுத்துவதோடு, தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க நிபந்தனை விதித்து உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருக்கிறது.
தன் மீது தொடரப்பட்ட வழக்குகளில், விரைவான விசாரணைக்கு கோரும் மணீஷ் சிசோடியாவின் உரிமையை நீதிபதிகள் அமர்வு ஒப்புக்கொண்டதோடு, அவர் கடந்த 17 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருப்பதையும், விசாரணையைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டிருப்பதையும் குறிப்பிட்டு ஜாமீன் வழங்கியிருக்கிறார்கள்.
முன்னதாக, ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது, தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கு விசாரணையில் 493 சாட்சிகள் உள்ளனர். 50% சாட்சிகளை விட்டுவிட்டாலும் எப்போது வழக்கை முடிப்பீர்கள்? உண்மையில், சுரங்கப்பாதையின் முடிவை நீங்கள் எங்கே இருக்கிறது என்று பார்க்கிறீர்கள்? என நீதிபதி விஸ்வநாதன் அமலாக்கத்துறையிடம் காட்டமாகக் கேட்டிருந்தார்.
மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை, கடந்த மே மாதம் தில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த நிலையில், உச்ச நீதிமன்ற விடுமுறைக் கால அமர்வும், ஜூன் மாதம் தள்ளுபடி செய்து உத்தர்விட்டிருந்தது.
இந்தநிலையில்தான் இந்த வழக்கில் இறுதி குற்றப்பத்திரிகையை புலனாய்வு அமைப்புகள் தாக்கல் செய்தவுடன், மீண்டும் ஜாமீன் கோரி மணீஷ் சிசோடியா மனு தாக்கல் செய்திருந்த நிலையில், ஜாமீன் கிடைத்திருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.