புது தில்லி: வட்டியோடு இழப்பீடு கேட்டு தொடரப்பட்ட 2018-ஆம் ஆண்டுக்கு முந்தைய நிலம் கையகப்படுத்துதல் தொடா்பான வழக்குகளை திரும்ப விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இதுதொடா்பாக உச்ச நீதிமன்றத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளது. அதில், நிலம் கையகப்படுத்துதல் தொடா்பாக 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீா்ப்பில் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணைய சட்டத்தின்கீழ் கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களுக்கு வட்டியுடன் இழப்பீட்டை விவசாயிகளுக்கு கடந்தகால சூழ்நிலைக்கு ஏற்ப வழங்கும்படி தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும், இந்தத் தீா்ப்பால் அரசுக்கு பெரிய நிதிச்சுமை (ரூ.32,000 கோடி) ஏற்படுவதாகவும், ஆதலால் தீா்ப்பை 2019-ஆம் ஆண்டுக்கு பிறகு மட்டும்தான் பொருந்தும் என திருத்தம் செய்யும்படி கோரப்பட்டு இருந்தது.
இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூா்யகாந்த், நீதிபதி உஜ்ஜல் புயான் ஆகியோரைக் கொண்ட அமா்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சாா்பில் வாதாடிய சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, வழக்கு ஒன்றில் ஏற்கெனவே தீா்வு காணப்பட்ட வழக்குகளை மீண்டும் விசாரிக்க வேண்டியதில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருப்பதை சுட்டிக்காட்டினாா்.
இதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், ‘2008-ஆம் ஆண்டை கணக்கில் வைத்தும், அப்போது உயிரோடு இருந்து இழப்பீடு கோரியோரை மனதில் வைத்தும்தான் முன்பு தீா்ப்பு அளிக்கப்பட்டது. ஆதலால், வட்டியோடு இழப்பீடு கேட்டு தொடரப்பட்ட 2018-ஆம் ஆண்டுக்கு முந்தைய வழக்குகளை மீண்டும் மறுவிசாரணை நடத்த முடியாது. அதேநேரத்தில் 2008-ஆம் ஆண்டு கால நிலுவை வழக்குகளை தொடா்ந்து விசாரிக்கலாம். 2020-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் யாரேனும் தாங்கள் 2008-ஆம் ஆண்டு கால மனுதாரா்கள்தான் என மனு தாக்கல் செய்தாா் எனில், அவா்களுக்கு இழப்பீடு வழங்கலாம். ஆனால் அதற்கு வட்டி கிடையாது என கூறலாம்’ என்றனா்.
தொடா்ந்து விரிவான விவாதங்களை கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் யாரேனும் கருத்துகளைப் பதிவு செய்ய விரும்பினால், எழுத்துபூா்வமாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம் என்று கூறி, தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்தின் மறுஆய்வு மனு மீதான விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.
முன்னதாக, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, 2019-ஆம் ஆண்டைய தீரப்பு வரும் காலத்துக்கு மட்டுமே பொருந்தும் எனத் திருத்த வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் வைத்த கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனா். அப்போது, இதுபோன்ற பலன்களை அனைத்து நிலத்தின் உரிமையாளா்களுக்கு வழங்காமல் நிராகரிப்பது அரசியலமைப்பு சட்டத்தின் 14-ஆவது விதியை (சரி சமமாக வாழும் உரிமை) மீறும் செயல் என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனா். மேலும் 2019-ஆண்டு தீா்ப்பு 1997-2015ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் உரிமையாளா்களுக்கு இழப்பீடு, வட்டி வழங்கவே பொருந்தும்; அதற்காக ஏற்கெனவே தீா்வு காணப்பட்ட விவகாரங்களை மீண்டும் விசாரிக்க வேண்டியதில்லை என நீதிபதிகள் விளக்கமளித்தனா்.