மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், வெள்ளிக்கிழமை காலை, மருத்துவக் கல்லூரியின் நான்காவது மாடியில், பெண் மருத்துவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில், அவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு முதுநிலை மருத்துவம் பயின்று வந்தவர் என்பதும், வியாழக்கிழமை இரவு அவர் பணியில் இருந்த நிலையில், அவர் கொலை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் போதிய பாதுகாப்பு இல்லை என்று கூறி, முதுநிலை மருத்துவம் பயின்று வரும் மருத்துவர்கள் இனி இரவுப் பணிக்கு வரமாட்டோம் என்று கூறியும், பெண் மருத்துவர் கொலைக்கு கண்டனம் தெரிவித்தும் மெழுகுவர்தி ஏந்தி, மருத்துவமனைக்கு ஊர்வலமாக வந்தனர்.
அவசரகால சிகிச்சைப் பிரிவைத் தவிர, மற்றப் பிரிவு மருத்துவர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கொல்கத்தாவிலும், முதுநிலை மருத்துவம் பயின்று வந்த பெண் மருத்துவர் கொலைக்கு நீதிகேட்டு, செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முதற்கட்டமாக, மருத்துவ மாணவியின் உடல்கூறாய்வில், மாணவி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பிறகு கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டிருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தற்கொலை அல்ல என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இது தற்கொலை அல்ல என்று திட்டவட்டமாக அறிவித்திருக்கும் காவல்துறை, மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு காவல்துறை தெரிவித்துள்ளது.
அவரது கழுத்து எலும்பு முறிக்கப்பட்டுள்ளது. பிறகு அவர் மூச்சை நிறுத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். உடல் முழுக்க காயங்கள் இருந்துள்ளன என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. உடல் கூறாய்வு, அவரது தாய் உள்பட இரண்டு பெண்கள் முன்னிலையில் செய்யப்பட்டிருப்பதாகவும், முழுக்க கேமரா பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு சிறப்பு புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து உயிரிழந்த பெண்ணின் தந்தை கூறுகையில், தனது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். ஆனால், உண்மையை மறைக்க சிலர் முயன்றுள்ளனர் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
சம்பவத்தின்போது, மருத்துவமனையில் இருந்த ஒருவர் கூறுகையில், பலியான முதுநிலை மருத்துவ மாணவி, நள்ளிரவு 2 மணியளவில், இளநிலை மருத்துவ மாணவிகளுடன் உணவு சாப்பிட்டார். மருத்துவர்கள் ஓய்வெடுக்க தனி அறை இல்லாததால் அவர் கருத்தரங்கு அறைக்குச் சென்று ஓய்வெடுத்தார். காலையில் அவர் அங்கு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இரவுப் பணியில் இருந்த ஐந்து பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.