தில்லி முதல்வரின் மாளிகைக் கட்டுமானத்தின்போது, முறைகேடு நடத்தியதால், இரண்டு பொறியாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கரோனா தொற்றுநோய் பரவியிருந்த காலகட்டத்தில், நிதி மேலாண்மை மற்றும் செலவினங்களைக் குறைப்பதற்காக, நிதி கட்டுப்பாடுகள் குறித்த உத்தரவுகளை நிதித் துறை வெளியிட்டிருந்தது.
ஆனால், கரோனா தொற்றுநோய் காலத்தில், அரசின் உத்தரவை மீறி, தில்லி முதல்வரின் மாளிகைக் கட்டுமானத்தில் அதிகளவில் செலவு செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
தில்லி அரசின் பொதுப்பணித் துறையில் தலைமைப் பொறியாளராக இருந்த பிரதீப் குமார் பர்மர், கண்காணிப்புப் பொறியாளர் அபிஷேக் ராஜ் இருவரும், முதல்வர் மாளிகையின் கட்டுமானத்தில் முக்கியப் பங்கு வகித்தனர்.
அவர்கள் இருவரும், மற்ற ஐந்து பொறியாளர்களுடன் சேர்ந்து, அரசின் விதிகளை மீறி, முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் உத்தரவின் பேரில், அரசுக்கு பெரும் செலவினை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தப் பொறியாளர்கள், பொதுப்பணித்துறை அமைச்சருடன் இணைந்து, தொற்றுநோய் காலகட்டத்தில், சட்டபூர்வமான அவசரம் இல்லாவிட்டாலும், மாளிகையின் கட்டுமானத்தை விரைவுபடுத்த, அவசர விதிமுறையை செயல்படுத்தியுள்ளனர்.
மாளிகையில் மேற்கொள்ளப்பட்ட கலை, அலங்காரப் படைப்புகள், உயர்தர வகுப்பு கல் தளங்கள், உயர்தர மரக் கதவுகள், தானியங்கி நெகிழ்க் கண்ணாடிக் கதவுகள், ஆடம்பர குளியலறை சாதனங்கள், பளிங்குத் தரை, அலங்காரத் தூண்கள் உள்ளிட்டவற்றிற்காக, கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்பட்டதாக, கண்காணிப்புத் துறை தெரிவித்தது.
இந்த நிலையில், பொறியாளர்கள் மீதான குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, ஐந்து பொறியாளர்களில் மூன்று பேரை பணி இடைநீக்கம் செய்ய, தில்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்ஸேனா உத்தரவிட்டிருந்தார். மேலும், ஓய்வுபெற்ற பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தற்போது, குவஹாட்டியில் பணிபுரியும் பிரதீப், கரக்பூரில் பணிபுரியும் அபிஷேக் ஆகிய இருவரையும் பணிநீக்கம் செய்யுமாறு, கண்காணிப்புத் துறை கோரியிருந்தது. இதனையடுத்து, பிரதீப்பும் அபிஷேக்கும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.