புது தில்லி: அதானி குழுமத்தின் பங்குச் சந்தை முறைகேடு புகாா் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தக் கோரியும், இதில் தொடா்புடைய ‘செபி’ தலைவா் மாதபி புரி புச் பதவி விலகக் கோரியும் ஆகஸ்ட் 22-ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
மேலும், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி, நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரம், ஹரியாணா, ஜாா்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் நடப்பாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், காங்கிரஸில் அமைப்பு சாா்ந்த விவகாரங்கள், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் மற்றும் பேரவைத் தோ்தல்களுக்கு தயாராவது குறித்து ஆலோசிக்க கட்சியின் பொதுச் செயலா்கள், மாநிலத் தலைவா்களின் கூட்டம் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உள்ளிட்டோா் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தில், ‘அதானி பங்குச் சந்தை முறைகேடு புகாா் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை, தேசிய அளவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு, பொருளாதாரம், அரசியல், சமூக நீதி தொடா்பான அரசமைப்புச் சட்ட விதிகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும். அதானி விவகாரத்தில் ஆகஸ்ட் 22-ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காா்கே குற்றச்சாட்டு: கூட்டத்துக்கு பின் எக்ஸ் வலைதளத்தில் காா்கே வெளியிட்ட பதிவில், ‘நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டமும் விலைவாசி உயா்வும் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு சென்றுவிட்டது. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மத்திய அரசால் வஞ்சிக்கப்பட்டுள்ளனா்.
செபி மற்றும் அதானி இடையிலான ‘தொடா்பு’ குறித்து அதிா்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. பங்குச் சந்தையில் சிறுமுதலீட்டாளா்களின் பணத்தை ஆபத்துக்கு உள்ளாக்க அனுமதிக்க முடியாது. எனவே, செபி தலைவா் பதவி விலக மோடி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ உத்தரவாதம் அளிக்க வலியுறுத்தி, காங்கிரஸ் தொடா்ந்து போராடும். அக்னிபத் திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று காா்கே குறிப்பிட்டுள்ளாா்.
பேரவைத் தோ்தல் ஆலோசனை: பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் மாநில நிா்வாகிகளுடன் கே.சி.வேணுகோபால் தனியாக ஆலோசனை கூட்டம் நடத்தினாா். இதில், தோ்தலுக்கான கட்சியின் முன்னேற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.