தெலங்கானாவில் மனைவியை வீட்டிற்கு அனுப்பாத மாமனாரை, ஆத்திரத்தில் கொன்ற மருமகனைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
தெலங்கானாவின் பாலன்னகுடெம் கிராமத்தில் வசித்து வந்த விவசாயியான நரசய்யாவின் மகள் ஸ்வப்னாக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணர் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடந்தது.
ஆனால், ஸ்வப்னாவுக்கும் ராமகிருஷ்ணருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக, ஸ்வப்னா தனது பெற்றோரின் வீட்டிற்குத் திரும்பினார்.
இந்த நிலையில், ஆக. 11, ஞாயிற்றுக்கிழமையில், அந்த கிராமத்திலுள்ள முத்தியாலம்மா தேவி கோவில் நிகழ்ச்சியில் ஊர்மக்கள் ஒன்றுகூடி இருந்தனர். அந்த சமயத்தில், ஸ்வப்னாவைக் கண்டு கோபமுற்ற ராமகிருஷ்ணர், தனது மாமனரான நரசய்யாவை, அருகிலிருந்த கட்டையால் தாக்கியுள்ளார்.
இதனையடுத்து, தலையில் பலத்த காயமடைந்த நரசய்யா, சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, நரசய்யாவை முலுகு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை அழைத்துச் சென்றனர்; இருப்பினும், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர். மேலும், நரசய்யாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதனையடுத்து, நரசய்யாவின் உயிரிழப்புக்குக் காரணமான ராமகிருஷ்ணர், சம்பவ இடத்திலிருந்து தப்பியோடி விட்டதாகவும், அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தேடப்பட்டு வருவதாகவும், துணை ஆய்வாளர் டி.வி.ஆர். சூரி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.