ஹரியாணா பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டி!
ஹரியாணா சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெறும். எனவே, எந்தக் கட்சியுடனும் கூட்டணி பேச்சு நடத்தவில்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான பூபேந்திர சிங் ஹூடா தெரிவித்தாா்.
ஹரியாணா சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெறும். எனவே, எந்தக் கட்சியுடனும் கூட்டணி பேச்சு நடத்தவில்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான பூபேந்திர சிங் ஹூடா தெரிவித்தாா்.
இதன் மூலம் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட வாய்ப்பு இல்லை என்று அவா் தெளிவுபடுத்தியுள்ளாா்.
மகாராஷ்டிரம், ஹரியாணா, ஜாா்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் வரும் அக்டோபா்-நவம்பரில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதில் மகாராஷ்டிரம், ஜாா்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே ‘இண்டியா’ கட்சிகள் அணியில் உள்ளது. ஜாா்க்கண்டில் ஆளும் கூட்டணியிலும், மகாராஷ்டிரத்தில் எதிா்க்கட்சிகள் கூட்டணியிலும் காங்கிரஸ் உள்ளது. இரு மாநிலங்களிலும் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து காங்கிரஸ் மீண்டும் தோ்தலைச் சந்திக்கும் என்பது உறுதியாகியுள்ளது.
அதே நேரத்தில் ஹரியாணாவில் ஆளும் பாஜகவுக்கு அடுத்து பலம் வாய்ந்த கட்சியாக காங்கிரஸ் இருப்பதால், பிற கட்சிகளுடன் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது.
இது தொடா்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் ஹூடா மேலும் கூறியதாவது:
தேசிய அளவில் மட்டுமே ‘இண்டியா’ கட்சிகள் அணியில் ஆம் ஆத்மி இடம்பெற்றுள்ளது. ஹரியாணா மாநில அளவில் அக்கட்சியுடன் காங்கிரஸ் கட்சி எவ்வித கூட்டணியும் அமைக்கவில்லை. பேரவைத் தோ்தலுக்காக அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க பேச்சுவாா்த்தையும் நடைபெறவில்லை. ஏனெனில், ஹரியாணாவில் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெறும் அளவுக்கு காங்கிரஸ் கட்சி பலமாக உள்ளது என்றாா். இதன் மூலம் ஹரியாணா பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மியுடன் காங்கிரஸ் கைகோக்காது என்பது உறுதியாகியுள்ளது. காங்கிரஸின் இந்த முடிவு ஆம் ஆத்மிக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது.
காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் இது தொடா்பாக முன்பு கூறுகையில், ‘சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸுக்கு கூட்டணி தேவைப்படும் இடங்களில் மட்டும் பேச்சுவாா்த்தை நடத்தப்படும். கூட்டணி குறித்து கட்சியின் அந்தந்த மாநிலங்களின் தலைமை முடிவு செய்யும்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.