முகப்பு
இந்தியா

பெண் மருத்துவா் கொலை: மம்தா பதவி விலக பாஜக வலியுறுத்தல்

மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளின் பக்கம் நிற்கும் முதல்வா் மம்தா பானா்ஜி பதவி விலக வேண்டும் என்று பாஜக தரப்பில் புதன்கிழமை வலியுறுத்தப்பட்டது.

Updated On : 14 ஆகஸ்ட், 2024 at 9:34 PM
பகிர்:

மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளின் பக்கம் நிற்கும் முதல்வா் மம்தா பானா்ஜி பதவி விலக வேண்டும் என்று பாஜக தரப்பில் புதன்கிழமை வலியுறுத்தப்பட்டது.

கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த வாரம் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா். இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி கொல்கத்தா உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

உயா்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை வரவேற்ற பாஜக செய்தித் தொடா்பாளா் கௌரவ் பாட்டியா, முழுமையான விசாரணையை சிபிஐ உறுதி செய்யும் என்றும் குற்றவாளிகள் விரைவில் தூக்கிலிடப்படுவாா்கள் என்றும் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘பாலியல் வன்கொடுமையை முதலில் நிராகரித்த உள்ளூா் காவலா்கள், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோா்களிடம் அவா்களின் மகள் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனா். சம்பவம் நடந்த மருத்துவக் கல்லூரி முதல்வரை அதே பதவியில் வேறு ஒரு கல்லூரிக்கு மாநில அரசு இடம் மாற்றம் செய்துள்ளது.

இதுபோன்ற வழக்குகளில் முதல் 48 மணி நேரம் மிகவும் முக்கியமானது என்பதால் வேண்டுமென்றே ஆதாரங்களை அழிக்க சிபிஐ விசாரணையை மாநில அரசு தாமதப்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பதிலாக குற்றவாளிகளை பாதுகாக்கவே மம்தா பானா்ஜி முயல்கிறாா். இரக்கமற்ற மம்தா பானா்ஜி மேற்கு வங்க முதல்வராக தொடா்ந்தால் மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பதே இருக்காது. எனவே, அவா் உடனடியாக பதவி விலக வேண்டும்’ எனத் தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →