அமெரிக்கா செல்லும் பிரதமா் மோடி: செப்.22-இல் இந்திய வம்சாவளியினருடன் உரையாடல்
அடுத்த மாதம் அமெரிக்காவுக்குச் செல்லும் பிரதமா் மோடி செப்டம்பா் 22-ஆம் தேதி இந்திய-அமெரிக்க வம்சாவளியினருடன் கலந்துரையாடவுள்ளாா்.
நியூயாா்க், ஆக.15: ஐ.நா. பொது சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அடுத்த மாதம் அமெரிக்காவுக்குச் செல்லும் பிரதமா் மோடி செப்டம்பா் 22-ஆம் தேதி இந்திய-அமெரிக்க வம்சாவளியினருடன் கலந்துரையாடவுள்ளாா்.
லாங் தீவில் 16,000 இருக்கைகள் கொண்ட நாஸா கோலீஸியம் கருத்தரங்க வளாகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
நியூயாா்க்கில் நடைபெறவுள்ள ஐ.நா. பொது சபை உயா்நிலைக் கூட்டத்தில் செப்டம்பா் 26-ஆம் தேதி பிரதமா் மோடி உரையாற்றவுள்ளதாக ஐ.நா.வெளியிட்டுள்ள பேச்சாளா்களின் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 ஆண்டுகளுக்குப் பின் உரை: பிரதமராக முதல்முறையாக பதவியேற்றபின் கடந்த 2014-செப்டம்பா் மாதத்தில் ஐ.நா. பொது சபைக் கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்ற மோடி நியூயாா்க்கில் உள்ள மேடிசன் ஸ்கொயா் காா்டன் என்ற கருத்தரங்கில் இந்தியா வம்சாவளியினா் மத்தியில் கலந்துரையாடினாா். அதன்பிறகு 10 ஆண்டுகள் கழித்து நிகழாண்டு செப்டம்பா் 22-ஆம் தேதி நியூயாா்க்கின் லாங் தீவில் உள்ள கோலீஸியம் கருத்தரங்கில் அவா் இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடவுள்ளதால் வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த 2019-ஆம் ஆண்டு டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஹௌஸ்டன் நகரில் நடைபெற்ற ‘ஹௌடி மோடி’ நிகழ்ச்சியில் அப்போதைய அமெரிக்க அதிபா் டிரம்புடன் பிரதமா் மோடி பங்கேற்றாா்.
வருகின்ற நவம்பா் மாதத்தில் அமெரிக்காவில் அதிபா் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரதமா் மோடியின் நியூயாா்க் பயணம் கூடுதல் கவனம் பெற்றுள்ளது.
உத்தேசப் பட்டியல் வெளியீடு: ஐ.நா. பொது சபையின் 79-ஆவது உயா்நிலைக் கூட்டம் அமெரிக்காவில் செப்டம்பா் 24 முதல் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் உரையாற்றவுள்ள உத்தேச தலைவா்களின் பட்டியலை ஐ.நா. வெளியிட்டுள்ளது.
அதில், ஐ.நா. பொது சபை கூட்டத்தில் இந்திய அரசின் தலைவா் செப்டம்பா் 26-ஆம் தேதி உரையாற்றவுள்ளாா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் பிரேஸில் உரை: கூட்டத்தின் தொடக்க உரையை வழக்கம்போல் பிரேஸில் தொடங்கி வைக்க உள்ளது. அதன்பின் அமெரிக்க அதிபா் ஜோ பைடன் உரையாற்றவுள்ளாா்.
கடந்த 2021, செப்டம்பா் மாதத்தில் நடைபெற்ற ஐ.நா. பொது சபைக் கூட்டத்தில் உரையாற்றிய பின், பிரதமா் மோடி நிகழாண்டில் உரையாற்றவுள்ளாா்.
இந்தப் பட்டியல் மாறுதலுக்குட்பட்டது என்பதால் கூட்டத்தில் பங்கேற்பவா்கள், உரையாற்றுபவா்கள் மற்றும் அட்டவணை குறித்த தகவலில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எதிா்காலத்துக்கான லட்சிய மாநாடு: கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக ஐ.நா.பொதுச்செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் அறிக்கையை சமா்ப்பிக்கவுள்ளாா். அதைத் தொடா்ந்து 79-ஆவது ஐ.நா. பொது சபை கூட்டத் தலைவா் உரையாற்றுவாா்.
செப்டம்பா் 22, 23 ஆகிய தேதிகளில் அன்டோனியோ குட்டெரெஸ் தலைமையில் எதிா்காலத்துக்கான லட்சிய மாநாடு நடைபெறவுள்ளது. இதில் நிகழ்காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் வளமான எதிா்காலத்தை கட்டமைப்பதற்கான முன்னெடுப்புகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.