ராஜஸ்தானின் பூண்டி மாவட்டத்தில் உள்ள ஹிந்தோலி உள்ளிட்ட சில பகுதிகளில் கனமழை பெய்தது. அங்கு வழக்கமாக பெய்யக்கூடிய மழை அளவைவிட 200 மில்லி மீட்டர் அளவைத் தாண்டி மழைப் பொழிவு பதிவாகியுள்ளது.
பாலைவன மாநிலமான ராஜஸ்தானின் ஜெய்ப்பூர், தௌசா, பரன், நாகூர், ஜோத்பூர், பிகானேர், பாலி மற்றும் சவாய் மாதோபூர் மாவட்டங்களிலும் சில இடங்களில் கனமழை பெய்தது.
இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் அஜ்மீர், பூண்டி மாவட்டங்களில் சில இடங்களில் மிக கனமழை பதிவாகியுள்ளது. கிழக்கு ராஜஸ்தானில் அதிகபட்சமாக பூண்டி மாவட்டத்தில் உள்ள ஹிந்தோலியில் 220 மில்லி மீட்டர் மழையும், மேற்கு மண்டலத்தில் உள்ள பிகானேர்ஸ் கோலாயத்தில் 172 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
அல்வார், சிகார், கரௌலி, கோட்டா, பில்வாரா, டோங்க், ஜெய்சால்மர், பார்மர் மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது.
வடகிழக்கு ராஜஸ்தானில் உருவான வளிமண்டல சுழற்சி இப்போது மெதுவாக மேற்குப் பகுதியை நோக்கி நகர்கிறது.
அதன் தாக்கம் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் ஜோத்பூர், அஜ்மீர், பிகானேர் உள்ளிட்ட சில பகுதிகளில் கனமழை அல்லது மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
நாளைமுதல் (ஆகஸ்ட் 17) பரவலான இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை பெரும்பாலான பகுதிகளில் வானம் தெளிவாகவும், சூரிய ஒளி இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் கடைசி வாரத்தில் மீண்டும் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சித்தோர்கரின் ராவத்பட்டாவில் உள்ள படஜ்ஹர் நீர்வீழ்ச்சியில் வியாழக்கிழமை சிக்கிய 50-க்கும் மேற்பட்டோரை மாநில பேரிடர் மீட்புப் படை குழுவினர் மீட்டனர்.
வனப்பகுதியில் உள்ள நீர் ஓடைக்கு வியாழன் அன்று பலர் சென்றதாகவும், அருவிக்கு செல்லும் வழி நீரில் மூழ்கியதால் காட்டுக்குள் சிக்கிக் கொண்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
மாநில பேரிடர் மீட்புப் படை குழுவின் வாகனமும் சேற்றில் சிக்கியது. இருப்பினும், வெள்ளிக்கிழமை காலை 53 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.