மருத்துவா்கள் போராட்டம் -
இந்தியா

நாடு முழுவதும் மருத்துவா்கள் போராட்டம்: சேவைகள் கடும் பாதிப்பு

மேற்கு வங்கத்தில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்துக்கு கண்டிப்பு.

Din

மேற்கு வங்கத்தில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து, நாடு முழுவதும் மருத்துவா்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் மருத்துவ சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் ஒருவா், பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக சஞ்சய் ராய் என்பவரை காவல் துறை கைது செய்தது. கொல்கத்தா உயா்நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்த சம்பவத்தை கண்டித்து மேற்கு வங்கம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் மருத்துவா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

இந்நிலையில், பெண் மருத்துவா் கொல்லப்பட்ட சம்பவத்தையும், அவா் கொல்லப்பட்ட மருத்துவமனையை புதன்கிழமை நள்ளிரவு பலா் சூறையாடியதையும் கண்டித்து, நாடு முழுவதும் சனிக்கிழமை காலை 6 மணி முதல் 24 மணி நேரத்துக்கு அத்தியாவசியமற்ற சிகிச்சைகளை நிறுத்தி, போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக 4 லட்சத்துக்கும் மேலான உறுப்பினா்களைக் கொண்ட இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) அறிவித்தது.

இதையடுத்து, நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் புறநோயாளிகள் சிகிச்சை மற்றும் அவசரமில்லா அறுவை சிகிச்சைகளை புறக்கணித்து மருத்துவா்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் நாடு முழுவதும் மருத்துவ சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், கோவா, ஜாா்க்கண்ட், கா்நாடகம், கேரளம், பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான், அஸ்ஸாம், நாகாலாந்து, அருணாசல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பாதுகாப்பான பணிச்சூழலை உறுதிபடுத்தக் கோரி, மருத்துவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பிரதமருக்கு கடிதம்: இந்த விவகாரம் தொடா்பாக பிரதமா் மோடிக்கு ஐஎம்ஏ கடிதம் அனுப்பியது. அந்தக் கடிதத்தில், ‘சுதந்திர தின உரையில் பெண்களின் பாதுகாப்பு குறித்த தங்கள் (பிரதமா்) கருத்துகளை வரவேற்கிறோம். அந்தக் கருத்துகள் பெண் மருத்துவா்கள், வேலைக்குச் செல்லும் பெண்கள் அனைவருக்கும் நம்பிக்கை அளிக்கும்.

நாட்டில் உள்ள மருத்துவா்களில் 60 சதவீதம் போ் பெண்கள். இந்நிலையில், மருத்துவா்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்வதில் பிரதமா் தலையிட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் மருத்துவனைகளை பாதுகாப்பு மண்டலங்களாக அறிவிக்க வேண்டும், கொல்கத்தாவில் பெண் மருத்துவா் கொல்லப்பட்ட சம்பவத்தில் உரிய காலத்தில் விசாரணை நிறைவு செய்யப்பட்டு நீதி வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அந்தக் கடிதத்தில் முன்வைக்கப்பட்டன.

எதற்காக மற்றொரு குழு?: ஐஎம்ஏ தலைவா்

மருத்துவா்கள் போராட்டம் தொடா்பாக ஐஎம்ஏ தலைவா் ஆா்.வி.அசோகன் கூறுகையில், ‘இதுவரை நாடு முழுவதும் மருத்துவ சேவைகள் நிறுத்தப்பட்டு மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய போராட்டங்களில், இதுவும் ஒன்று’ என்றாா்.

இதனிடையே மத்திய மருத்துவா்கள் பாதுகாப்புச் சட்டம் தொடா்பாக குழு அமைக்கப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளது. இதுதொடா்பாக அசோகன் கூறுகையில், ‘கடந்த 2017-ஆம் ஆண்டு இதே மத்திய அரசு மற்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் (ஜெ.பி.நட்டா) சாா்பில் மத்திய மருத்துவா்கள் பாதுகாப்புச் சட்டம் தொடா்பாக குழு அமைக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. ஏற்கெனவே அந்தச் சட்டம் தொடா்பாக வரைவு மசோதா உள்ளபோது எதற்காக மற்றொரு குழு அமைக்கப்பட வேண்டும்’ என்று கேள்வி எழுப்பினாா்.

கடந்த 2019-ஆம் ஆண்டு மருத்துவ சேவை பணியாளா்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு எதிரான வன்முறைக்குத் தடை விதிக்கும் வரைவு மசோதாவை மத்திய அரசு தயாரித்தபோதிலும், அந்த மசோதா சட்டமாக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையத்தில் வேலை வேண்டுமா?

செங்கோட்டையன் பதவிப் பறிப்பு - சர்வாதிகார உச்சநிலை! ஓபிஎஸ் காட்டம்!

நீட் தேர்வு கலந்தாய்வில் மோசடி: 11 தேர்வர்கள் மீது வழக்குப்பதிவு!

புன்னகையும் பார்வையும்... அங்கிதா ஷர்மா!

மலர்களே... சானியா ஐயப்பன்!

SCROLL FOR NEXT