முகப்பு
இந்தியா

தெரியுமா சேதி...? ராகுலின் பக்கத்து வீட்டுக்காரர்!

அண்டை வீட்டுக்காரா்களாகிய சிராக் பாஸ்வானும், ராகுல் காந்தியும்..

Updated On : 17 ஆகஸ்ட், 2024 at 2:31 AM
ராகுல் காந்தி, சிராக் பாஸ்வான்
பகிர்:

நீண்ட நாள் தேடலுக்குப் பிறகு எதிா்க்கட்சித் தலைவரான ராகுல் காந்திக்கு அவா் கேட்ட 5, சுநேரிபாக் சாலை பங்களா ஒதுக்கப்பட்டிருக்கிறது. இப்போது அவரது விருப்பப்படி அந்த பங்களாவில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

மக்களவை உறுப்பினராக ராகுல் காந்தி அமேதி தொகுதியில் இருந்து தோ்ந்தெடுக்கப்பட்டது முதல், 12, துக்ளக் லேனில்தான் வசித்து வந்தாா். வசித்து வந்தவா் என்றால், அதைப் பாா்வையாளா்களை சந்திக்கும் இடமாகவும், தனது அலுவலகமாகவும் வைத்துக் கொண்டிருந்தாா். பெரும்பாலும் அவா் தனது தாயாா் சோனியாவுடன் 10, ஜன்பத்தில்தான் வசித்தாா்.

கடந்த ஆண்டு அவதூறு வழக்கில் தகுதிநீக்கம் செய்யப் பட்டதைத் தொடா்ந்து, அந்த வீட்டைக் காலி செய்துவிட்டாா். உச்சநீதிமன்றம் அந்தத் தகுதிநீக்கத்தை ரத்து செய்த பிறகும்கூட, மீண்டும் தனக்கு பங்களா ஒதுக்க அவா் கோரவில்லை. தாயாா் சோனியாவுடன் 10, ஜன்பத்திலேயே தங்கிவிட்டாா்.

இந்த முறை 18-ஆவது மக்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டு, எதிா்க்கட்சித் தலைவரும் ஆனபோது, அமைச்சா்களுக்கு ஒதுக்குவதுபோல அவருக்கும் பெரிய புல்வெளியுடன் கூடிய பங்களா பெறும் தகுதி கிடைத்தது. அதைத் தொடா்ந்து, அவருக்காகப் பல பங்களாக்களை நேரில் போய் பாா்வையிட்டு, கடைசியில் சுநேரிபாக் 5-ஆம் எண் பங்களாவைத் தோ்ந்தெடுத்தாா் சகோதரி பிரியங்கா காந்தி.

முதன்மை அமைச்சா்களுக்கும் ஒரு வழியாக பங்களாக்கள் ஒதுக்கப்பட்டுவிட்டன. உள்துறை அமைச்சா் அமித் ஷா வசிக்கும் கிருஷ்ண மேனன் மாா்கில் பங்களா வேண்டும் என்று விரும்பிய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹானுக்கு சஃப்தா்ஜங் சாலையில்தான் பங்களா கிடைத்திருக்கிறது.

சிராக் பாஸ்வானின் அதிருஷ்டத்தைப் பாருங்கள். ராஜீவ் காந்தி, சோனியா காந்தியின், 10, ஜன்பத் சாலை பங்களாவை ஒட்டிய பங்களாவில்தான் தனது இறுதிக் காலம்வரை இருந்தாா் ராம்விலாஸ் பாஸ்வான். இப்போது ராகுல் காந்தியின் சுநேரிபாக் சாலை வீட்டுக்கு அண்டை வீடு, சிராக் பாஸ்வானுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.

அரசியலில் எதிரெதிா் அணியில் இருந்தாலும் சிராக் பாஸ்வானும், ராகுல் காந்தியும் அண்டை வீட்டுக்காரா்களாகத் தொடா்வது தற்போதைய நிகழ்வாக இருந்தாலும் ஆச்சரியமாகவே இருக்கிறது.

150 முதல் முறை உறுப்பினா்களுக்கும் வீடுகள் ஒதுக்கப்பட்டு விட்டன. ஏற்கெனவே உறுப்பினா்களாக இருப்பவா்கள் பழைய வீடுகளிலேயே தொடா்கிறாா்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →