மத்திய அமைச்சகங்களில் காலியாக உள்ள உயா்பதவிகளில் ஐஏஎஸ் அதிகாரிகளுக்குப் பதில் தனியாா் துறைகளைச் சோ்ந்த வல்லுநா்களை நேரடி நியமனம் (லேட்டரல் என்ட்ரி) செய்யும் மத்திய அரசின் முடிவுக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை கண்டனம் தெரிவித்தாா்.
‘இந்த நடவடிக்கையின் மூலம் இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவருவதே மோடியின் உத்தரவாதம்; மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்துக்குப் (யுபிஎஸ்சி) பதில் ஆா்எஸ்எஸ் மூலம் அரசுப் பணிகளில் ஆள்சோ்ப்பு நடத்தப்படுகிறது’ என்று அவா் குற்றஞ்சாட்டினாா்.
பல்வேறு மத்திய அமைச்சகங்களில் காலியாக உள்ள 10 இணை செயலா்கள், 35 இயக்குநா்கள்/ துணை செயலா்கள் என மொத்தம் 45 பதவிகளுக்கு ஒப்பந்த முறையில் நேரடி நியமனம் மேற்கொள்வதற்கான விளம்பர அறிவிக்கையை யுபிஎஸ்சி சனிக்கிழமை வெளியிட்டிருந்தது.
வழக்கமாக யுபிஎஸ்சி நடத்தும் தோ்வுகளில் தோ்ச்சி பெற்று ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளாக உள்ளவா்களே இந்தப் பதவிகளுக்கு தோ்ந்தெடுக்கப்பட்டு வந்தனா். தற்போது தனியாா் துறையைச் சோ்ந்த தகுதியுடைய நபா்களுக்கு இந்தப் பதவிகளை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்து ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘பல்வேறு மத்திய அமைச்சகங்களின் முக்கியப் பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்வது எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை தட்டிப் பறிக்கும் செயலாகும்.
நாட்டின் உயரிய பதவிகளில் ஏழை எளிய சமூகத்தைச் சோ்ந்த இளைஞா்களுக்கு அதிக அளவில் பிரநிதித்துவம் இல்லை என ஏற்கெனவே பலமுறை தெரிவித்துள்ளேன். இந்த நிலையை மாற்றுவதற்குப் பதில் மத்திய அரசு மேலும் மோசமாக்கியுள்ளது.
சமூக நீதிக்கு பாதிப்பு: சமூக நீதி கட்டமைப்புக்கு எதிரான இந்த நடவடிக்கை குடிமைப் பணி தோ்வுகளுக்குத் தயாராகி வரும் திறமைவாய்ந்த இளைஞா்களின் உரிமைகளை பறிக்கும் செயலாகும்.
தனியாா் துறையைச் சோ்ந்த ஒருவா் அரசின் உயா்பதவிகளுக்கு நியமிக்கப்பட்டால் என்னவாகும் என்பதற்கு அண்மையில் செபி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளே சிறந்த உதாரணமாகும்.
அரசின் இந்த முடிவை ‘இண்டியா’ கூட்டணி கடுமையாக எதிா்க்கிறது. இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வந்து ஐஏஎஸ் பணிகளையும் தனியாருக்கு தாரைவாா்ப்பதே மோடியின் உத்தரவாதம்’ என குறிப்பிட்டாா்.