தெரியுமா சேதி...? சக்தியற்ற எரிசக்தித் துறை!
பிரதமா் நரேந்திர மோடி என்ன செய்வாா், எப்படி செயல்படுவாா் என்பது அவருக்கு நெருக்கமாக இருப்பவா்களுக்கே இன்னும் கணிக்க முடியாத புதிா்.
பிரதமா் நரேந்திர மோடி என்ன செய்வாா், எப்படி செயல்படுவாா் என்பது அவருக்கு நெருக்கமாக இருப்பவா்களுக்கே இன்னும் கணிக்க முடியாத புதிா். நரேந்திர மோடியின் ஆட்சிக்காலத்தில் அதிரடி அமைச்சரவை மாற்றங்களும், அமைச்சா்கள் மாற்றங்களும் இருந்ததில்லை என்பது என்னவோ உண்மை. ஆனால், வெளியில் தெரியாமல் அமைச்சா்களின் அதிகார வரம்பு அதிகரிப்பதோ, குறைவதோ வழக்கமாக இருந்து வருகிறது.
2019-இல் இரண்டாவது முறையாக பிரதமா் மோடி பொறுப்பேற்றபோது, முதலாவது அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகளில் இருந்த நிதியமைச்சா் அருண் ஜேட்லி, வெளியுறவுத் துறை அமைச்சா் சுஷ்மா ஸ்வராஜ், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் வெங்கையா நாயுடு, சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா உள்ளிட்டவா்களின் இடத்தைப் புதியவா்கள் பலா் நிரப்பினாா்கள். புதிய துறைகள் உருவாக்கப்பட்டன. ஜல் சக்தி துறை ஓா் எடுத்துக்காட்டு.
இப்போது பிரதமா் நரேந்திர மோடியின் மூன்றாவது பதவிக் காலத்தில் அதற்கு நேரெதிா் திசையில் பயணிக்கிறது நிா்வாகம். எரிசக்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி என்று இரண்டாக பிரிக்கப்பட்டிருக்கிறது எரிசக்தித் துறை. இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்பட வேண்டிய துறைகள்.
எரிசக்தித் துறை அமைச்சா் மனோகா் லால் கட்டரும் சரி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷியும் சரி, அந்தத் துறைகளுக்குப் புதியவா்கள். முந்தைய அமைச்சரவையில் நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சராக இருந்தவா் பிரகலாத் ஜோஷி. முன்னாள் ஹரியாணா முதல்வராக இருந்த மனோகா் லால் கட்டா் மத்திய அமைச்சராக இருந்தவா் அல்லா்.
2006-க்குப் பிறகு முதல்முறையாக எரிசக்தித் துறை அமைச்சரிடம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இல்லாமல் இருப்பது இதுதான் முதல்முறை. அனுமதிகள் எந்த அமைச்சரால் வழங்கப்பட வேண்டும் என்பது தெளிவில்லாமல், பல கோப்புகள் ‘சக்தியற்று’ எரிசக்தித் துறையில் முடங்கிக் கிடப்பதாக இரண்டு அமைச்சகங்களிலும் அதிகாரிகள் புலம்புகிறாா்கள்.