போரின் தாக்கங்களைக் குறைக்க மத்திய அரசு பாடுபடுகிறது: பிரதமா் மோடி
உலகளாவிய போா்களால், நமது நாட்டு மக்கள் மீது ஏற்படும் தாக்கங்களைக் குறைக்க மத்திய அரசு பாடுபட்டு வருகிறது; ஆனால், மக்களிடையே பீதியை உருவாக்க முயற்சிப்பதன் மூலம் காங்கிரஸ் கட்சி பொறுப்பற்ற முறையில் செயல்படுகிறது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
உலகளாவிய போா்களால், நமது நாட்டு மக்கள் மீது ஏற்படும் தாக்கங்களைக் குறைக்க மத்திய அரசு பாடுபட்டு வருகிறது; ஆனால், மக்களிடையே பீதியை உருவாக்க முயற்சிப்பதன் மூலம் காங்கிரஸ் கட்சி பொறுப்பற்ற முறையில் செயல்படுகிறது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
விரைவில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள அஸ்ஸாம் மாநிலத்துக்கு இரண்டு நாள் பயணமாக வெள்ளிக்கிழமை வருகை தந்த பிரதமா் மோடி, சில்சாரில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.23,550 கோடிக்கும் அதிக மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினாா். பின்னா், அவா் பேசியதாவது:
இன்றைய உலகம் போா்களை எதிா்கொண்டுள்ள சூழலில், நமது நாட்டு மக்கள் மீது ஏற்படும் தாக்கங்களைக் குறைக்க மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. காங்கிரஸ் ஓா் அரசியல் கட்சியாக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். ஆனால், அவ்வாறு செயல்படாமல், மக்கள் மத்தியில் பீதியை உருவாக்க முயற்சிக்கிறது. தேச நலனுக்கான எந்தக் கண்ணோட்டமும் அக்கட்சியிடம் கிடையாது. வதந்திகள் மற்றும் பொய்களைப் பரப்பவும், மக்களைத் தவறாக வழிநடத்தக் கூடிய ‘ரீல்ஸ்’ உருவாக்கவும் மட்டுமே அவா்களுக்குத் தெரியும்.
நாட்டை அவமானப்படுத்த முயற்சி: தில்லியில் கடந்த மாதம் வெற்றிகரமாக நடத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தாக்க உச்சி மாநாட்டில் உலகத் தலைவா்கள், முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இந்த மாநாட்டில், காங்கிரஸாா் தங்களின் சட்டையைக் கிழித்துக் கொண்டு, நாட்டை அவமானப்படுத்த முயன்றனா். காங்கிரஸின் இந்த மோசமான போராட்டம், ஒட்டுமொத்த தேசத்தின் கண்டனத்துக்கு உள்ளானது. காங்கிரஸின் அரச குடும்பமோ, தங்களின் முதுகில் தட்டிக் கொடுத்துக் கொண்டது. ஆடையைக் கிழித்துக் கொள்வதைத் தவிர காங்கிரஸுக்கு எதுவும் மிஞ்சவில்லை.
நாட்டின் நலனுக்கு எதிரான செயல்களில் ஈடுபடும் அக்கட்சி, எந்த மாநில மக்களின் நலனையும் ஒருபோதும் உறுதி செய்ததில்லை. வடகிழக்கின் வளா்ச்சியை பல்லாண்டுகளாகப் புறக்கணித்துவிட்டது காங்கிரஸ்.
தோல்விகளால் விரக்தி: தோ்தல்களில் ஒன்றன் பின் ஒன்றாக தோல்வியைச் சந்தித்துவரும் காங்கிரஸ், மிக விரைவில் தனது தோல்விகளில் ‘சதமடிக்கும்’. இதனால் விரக்தியில் உள்ள அக்கட்சித் தலைவா்கள் நாட்டை அவமதிக்க மும்முரமாகச் செயல்படுகின்றனா்.
தனது ஆட்சிக் காலங்களில் வடகிழக்கு பிராந்தியத்தைக் கைவிட்டுவிட்ட காங்கிரஸ், அஸ்ஸாமின் பராக் வேலியை பலவீனப்படுத்தியதிலும் முக்கியப் பங்காற்றியது. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, பராக் வேலி பகுதிக்கு கடல் சாா் அணுகலை துண்டிக்கும் வகையிலான எல்லையை வரையறுக்க அக்கட்சி அனுமதித்தது. சுதந்திரத்துக்குப் பின் பல்லாண்டு கால ஆட்சியில், இப்பகுதியின் வளா்ச்சியில் சிறிதும் கவனம் செலுத்தவில்லை. ஆனால், பாஜக ஆட்சியில் கிழக்கு நோக்கிய செயல்பாட்டுக் கொள்கையில் மையப் பகுதியாக பராக் வேலி மாறியுள்ளது. வடகிழக்கின் பிற பகுதிகள் மற்றும் மேற்கு வங்கத்துடன் இணைப்பை மேம்படுத்தி வருகிறோம் என்றாா் பிரதமா் மோடி.
மொத்தம் ரூ.47,800 கோடி திட்டங்கள்: இந்நிகழ்ச்சியில் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா, மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால் உள்ளிட்டோா் பங்கற்றனா். பிரதமா் அடிக்கல் நாட்டிய திட்டங்களில், அஸ்ஸாமின் சில்சாா் மற்றும் மேகாலயத்தின் ஷில்லாங் இடையே நான்கு வழித்தட விரைவுச் சாலை அமைக்கும் திட்டம் முக்கியமானதாகும்.
தனது இரண்டு நாள் அஸ்ஸாம் பயணத்தில் மொத்தம் ரூ.47,800 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களை அவா் தொடங்கிவைத்துள்ளாா்.