விநோதம்: சகோதரியை கொன்றவருக்கு ராக்கி கட்டும் கேரள கன்னியாஸ்திரி!
விநோதமாக, சகோதரியை கொன்றவருக்கு ஆண்டுதோறும் ராக்கி கட்டுகிறார் கேரள கன்னியாஸ்திரி.
ரக்சா பந்தன் எனப்படும் சகோதரத்துவ நாள் வட மாநில மக்களால் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் நிலையில், தனது சகோதரியைக் கொன்றவருக்கு ஆண்டு தோறும் ராக்கி கட்டி வருகிறார் கேரள கன்னியாஸ்திரி.
மத்தியப் பிரதேச மாநிலம் உதய நகரைச் சேர்ந்த சமுந்தர், ரக்சா பந்தன் நாளில் சுமார் 200 கிலோ மீட்டர் பயணித்து, போபாலில் உள்ள பள்ளிக்கு வந்து, கன்னியாஸ்திரி செல்மிக்காகக் காத்திருப்பார்.
அங்கு வரும் செல்மி, அவருக்கு ராக்கி கட்டி விட்டு, இனிப்பு மற்றும் சில பரிசுகளையும் சமுந்தருக்கு அளிப்பார். திங்கள்கிழமை நாடு முழுவதும் ரக்சா பந்தன் கொண்டாடப்பட்ட நிலையில், சமுந்தருக்கு வழக்கம் போல செல்மி ராக்கி கட்டினார்.
பொதுவாக, ராக்கி கட்டுவதில் எந்த ஆச்சரியமும் இல்லாத நிலையிலும் கூட, செல்மி ராக்கி கட்டுவது நிச்சயம் விநோதமாகவே பலருக்கும் தெரியும். காரணம், தனது மூத்த சகோதரி ராணி மரியாவைக் கொலை செய்த குற்றவாளிதான் இந்த சமுந்தர்.
கடந்த 1995ஆம் ஆண்டு கன்னியாஸ்திரியாக இருந்து, மத்தியப் பிரதேசத்தில் கிராம மக்களுக்காகப் பணியாற்றி வந்த ராணி மரியாவை, சமுந்தர் குத்திக் கொலை செய்தார்.
அதாவது, சகோதரி ராணி என்று அழைக்கப்பட்ட ராணி மரியா, மத்தியப் பிரதேசத்தில் உள்ள தேவாஸ் மாவட்டத்தில் கடந்த 1995-ஆம் ஆண்டு பிப்ரவரி 25-ஆம் தேதி பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். அவரது உடலில் 55 முறை கத்தியால் குத்தப்பட்டது.
மத்தியப் பிரதேசத்தில் நிலமற்ற மக்களின் முன்னேற்றத்துக்காக சகோதரி ராணி பாடுபட்டு வந்ததால், அவர் மீது நிலச் சுவான்தார்கள் அதிருப்தியில் இருந்தனர். இந்த நிலையில், கூலிப்படையைச் சேர்ந்த சமுந்தர் சிங், ஓடும் பேருந்தில் ராணியைக் கத்தியால் குத்திக் கொலை செய்தார். இந்தச் சம்பவத்தில், சமுந்தர் சிங்குக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் நன்னடத்தை காரணமாக அந்தத் தண்டனை குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அவர் சிறையில் இருந்தபோது, அதாவது 2002ஆம் ஆண்டு சிறைச்சாலைக்கு சென்ற சகோதரி செல்மி, முதல் முறையாக சமுந்தருக்கு ராக்கி கட்டினார். இதனைத் தொடர்ந்து 2003ஆம் ஆண்டு ராணி மரியாவின் தாய் மற்றும் சகோதரர் சிறைக்குச் சென்று, தனது மகளைக் கொன்ற சமுந்தரின் கைகளில் முத்தமிட்டார் தாய் எலிஸ்வா. தொடர்ந்து, அவரை மன்னிப்பதாகவும் எழுதிக் கொடுத்ததால் அவர் 2006ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்.
விடுதலையான சமுந்தர், நேராக கேரளம் வந்து, சகோதரி ராணியின் பெற்றோரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். அவர்களும் மன்னித்து, சமுந்தரை தங்களது மகனாக ஏற்றுக்கொண்டனர். அது முதல், சமுந்தர், ஒவ்வொரு ஆண்டும் போபால் சென்று செல்மியிடம் ராக்கிக் கட்டிக்கொண்டு வருகிறார்.
சமுந்தர், ராணி மரியாவைக் கொலை செய்யும்போது, செல்மி மூன்றாம் வகுப்புதான் படித்து வந்தார். அவர் வளர்ந்து, தனது மூத்த சகோதரியைப் போல கன்னியாஸ்திரி ஆக வேண்டும் என்று விரும்பினார். பிறகு அவர் போதனைகள் மூலம் சமுந்தரை மன்னிக்க வேண்டும் என்று விரும்பியதே, இந்த முன்னேற்றங்களுக்குக் காரணமாக அமைந்தது.