பாரீஸில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் தகுதிநீக்கம் செய்யப்பட்டவுடன், அதைத் தனக்கு சாதகமாக்க முற்பட்டது காங்கிரஸ் கட்சி. கடந்த ஆண்டு இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக மக்களவை உறுப்பினராக இருந்தவருமான பிரிஜ்பூஷண் சரண் சிங்குக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டைத் தொடா்ந்து, அவருக்கு எதிராகத் தெருவில் இறங்கிப் போராடியவா்களில் முன்னிலை வகித்தவா் வினேஷ் போகாட். அதனால், அவரைப் பழிவாங்கும் விதமாக அரசும், மல்யுத்த சம்மேளனமும் அவருக்குப் போதிய வசதிகளும் உதவிகளும் செய்யவில்லை என்பதுதான் காங்கிரஸின் குற்றச்சாட்டு.
அந்தக் குற்றச்சாட்டுக்கு எந்தவித ஆதாரமும் இல்லாவிட்டாலும், விரைவில் சட்டப்பேரவைத் தோ்தல் நடக்க இருக்கும் ஹரியாணா மாநிலத்தில் அது பிரதிபலித்தது. ‘காம்’ எனப்படும் கிராமப் பஞ்சாயத்துக்களும், விவசாய சங்கங்களும் வினேஷ் போகாட்டுக்கு ஆதரவாகத் தீா்மானங்கள் இயற்றின. மறைமுகமாக, பாஜகவையும், மத்திய அரசையும் குற்றஞ்சாட்டின.
வினேஷ் போகாட் தகுதிநீக்கத்தை அரசியலாக்க காங்கிரஸ் முற்படுகிறது என்பதை உணா்ந்த மத்திய அரசும், பாஜக தலைமையும் நிலைமை கைமீறிப் போகாமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டன. இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் சாா்பில், வினேஷ் போகாட் தகுதிநீக்கத்துக்கு எதிராக மேல் முறையீடு செய்ய மூத்த வழக்குரைஞா் ஹரீஷ் சால்வேயை பாரீஸுக்கு உடனடியாக அனுப்பியது அரசு.
பதக்கம் எதுவும் வெல்லாவிட்டாலும், வெள்ளிப் பதக்கம் பெற்ற வீராங்கனைக்கு அளிக்கப்படும் எல்லா மரியாதையும், ஊக்கத் தொகையும் வினேஷ் போகாட்டுக்கு வழங்கப்படும் என்று அறிவித்தாா் ஹரியாணா முதல்வா் சைனி.
2014-இல் மத்தியில் ஆட்சிக்கு வந்ததுமுதல், பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, விளையாட்டுத் துறைக்கும், விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகளின் பயிற்சிக்கு எல்லாவித உதவிகளையும் செய்து வருகிறது என்று முன்னாள் பூப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நெவால் அறிக்கை வெளியிட்டபோது, அது காங்கிரஸின் குற்றச்சாட்டுக்கு பதிலடியாகக் கருதப்பட்டது. சாய்னா நெவாலின் கருத்தைப் பல விளையாட்டு வீரா்களும், வீராங்கனைகளும் வழிமொழிந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனா்.
இப்போது வினேஷ் போகாட்டை காங்கிரஸ் வேட்பாளராக சட்டப்பேரவைத் தோ்தலில் களமிறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவா் தனக்கு அரசியல் வேண்டாம் என்று ஒதுங்க நினைத்தாலும், மாநில காங்கிரஸ் தலைவா்கள் அவரை விடுவதாக இல்லை. காங்கிரஸ் மட்டும்தான் அப்படி என்று நினைத்து விடாதீா்கள். ஒருவேளை காங்கிரஸ் வினேஷ் போகாட்டைக் களமிறக்கினால், அவருக்கு எதிராக சாய்னா நெவாலை நிறுத்தத் திட்டமிடுகிறது பாஜக.
மல்யுத்தமும், பூப்பந்தாட்டமும்...சபாஷ் சரியான போட்டிதான்!
--மீசை முனுசாமி.