உடல் ஒத்துழைத்தால் 2028 ஒலிம்பிக்கில் பங்கேற்பேன் என இந்திய ஹாக்கி வீரர் மன்பிரீத் சிங் இன்று (ஆக. 26) தெரிவித்தார்.
32 வயதாகும் மன்பிரீத் சிங் இதுவரை 4 ஒலிம்பிக் தொடர்களில் பங்கேற்று, இரு முறை பதக்கங்களை வென்றுள்ளார். அடுத்து லாஸ் ஏஞ்சலீஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் தொடரில் பங்கேற்றால், 5 ஒலிம்பிக் தொடர்களில் பங்கேற்ற நபர் என்ற சாதனையை அவர் படைப்பார்.
2028 ஒலிம்பிக்கில் பங்கேற்பது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய மன்பிரீத் சிங்,
''எனது இலக்கி லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக் போட்டிதான். ஆனால் அதற்கு உடல் ஒத்துழைக்க வேண்டும். என்னுடை உடல் ஆரோக்கியத்தையும், ஆட்டத்தையும் என்னால் தக்கவைக்க முடிந்தால் கட்டாயம் லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக்கில் நானும் இருப்பேன்.
இதுவரை எந்தவித உடல்நிலை குறைபாட்டையும் சந்திக்கவில்லை. ஹாக்கியில் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வது முக்கியம்.
நான்கு ஒலிம்பிக் தொடர்களில் விளையாடியுள்ளேன். முதல் இரு தொடர்களில் எந்த பதக்கத்தையும் பெறவில்லை. ஆனால், அடுத்த இரு தொடரிலும் பதக்கங்களைப் பெற்றேன். அடுத்தடுத்து பதக்கங்களைப் பெற்றது அற்புதமான உணர்வு. எந்த சூழலில் விளையாடவும் நான் தயாராக உள்ளேன். அணியின் தேவைக்கு ஏற்ப என்னுடைய விளையாட்டை என்றுமே மாற்றி அமைத்துக்கொள்வேன்.
ஒலிம்பிக் ஆட்டத்தின்போது அமித் ரோஹிதாஸ் சிவப்பு அட்டை வாங்கி வெளியேறியபோது, தடுப்பாட்டத்தை நான் தொடர வேண்டும் என உடனடியாக முடிவு செய்து விளையாடினேன். அதற்காக அதிகம் பயிற்சி எடுத்துள்ளேன். அதனால், ஹாக்கியில் எந்த ஆட்டமுன் எனக்கு கடினமானதாக இருக்காது. ஆட்டத்தில் நம்முடைய பொறுப்பு என்ன என்பதை உணர்ந்து ஆடினாலே போதும்'' என மன்பிரீத் சிங் குறிப்பிட்டார்.
இந்திய ஹாக்கி அணியில் மத்திய ஆட்டக்காரராக இருந்த மன்பிரீத் சிங், தடுப்பாட்டத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
41 ஆண்டுகளாக இந்திய ஹாக்கி அணி பதக்கங்களை வெல்லாத நிலையில், 2020-ல் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் இந்திய ஹாக்கி அணிக்கு கேப்டனாக செயல்பட்டு பதக்கம் பெற்றுத்தந்தவர் மன்பிரீத் சிங். 2024 பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஹர்மன்பிரீத் சிங் தலைமையில் மத்திய தடுப்பாட்டக்காரராக களமிறங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.