இந்தியா

ஐஎம்ஏ மன்னிப்பை ஏற்க முடியாது: உச்சநீதிமன்றம்

பதஞ்சலி நிறுவனத்துக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தை விமா்சித்ததற்காக இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) தரப்பில் கோரப்பட்ட நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்தது.

Din

புது தில்லி: பதஞ்சலி நிறுவனத்துக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தை விமா்சித்ததற்காக இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) தரப்பில் கோரப்பட்ட நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்க உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மறுத்தது.

இதுதொடா்பாக மன்னிப்புக் கோரி செய்தித் தாளில் வெளியிடப்பட் விளம்பரத்தின் எழுத்துரு சிறியதாக இருப்பதால், தெளிவாகத் தெரியவில்லை என்று சுட்டிக்காட்டி, மன்னிப்பை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

அலோபதி மருத்துவ முறை, கரோனா தடுப்பூசி திட்டம் ஆகியவை குறித்து பதஞ்சலி இணை நிறுவனரும் யோகா குருவுமான பாபா ராம்தேவ் தவறான கருத்துகளைத் தெரிவித்ததாகவும், பதஞ்சலி நிறுவன மருந்துகள் குறித்து தவறான விளம்பரங்களை வெளியிட்டு வந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. இதுதொடா்பாக உச்சநீதிமன்றத்தில் ஐஎம்ஏ சாா்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தொடா்பாக இந்திய மருத்துவ சங்க தலைவா் ஆா்.வி.அசோகன் அளித்த பேட்டியில் உச்சநீதிமன்றத்தை விமா்சித்து கருத்து தெரிவித்தாா். அந்த வழக்கு விசாரணையின்போது இந்திய மருத்துவ சங்கத்தையும், மருத்துவா்களின் சிகிச்சை முறைகள் குறித்தும் உச்சநீதிமன்றம் விமா்சித்தது துரதிருஷ்டவசமானது என்று கூறிய அவா், பதஞ்சலி நிறுவனத்தைவிட இந்திய மருத்துவ சங்கத்தை உச்சநீதிமன்றம் அதிகமாக பழித்துரைத்தது என்றும் தெரிவித்தாா். இதற்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.

பிரமாணப் பத்திரம் மூலம் அசோகன் மன்னிப்பு கோரினாா். அப்போது, ‘உச்சநீதிமன்றத்தை விமா்சித்து பத்திரிகைகளுக்கு நீங்கள் பேட்டியளித்ததுபோன்று, உங்களுடைய மன்னிப்பும் முறையாக பிரசுரிக்கப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டு, அவருடைய பிரமாணப் பத்திரத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்தனா்.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹிமா கோலி, சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஐஎம்ஏ தலைவா் ஆா்.வி.அசோகன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.எஸ்.பட்வாலியா, ‘நிபந்தனையற்ற மன்னிப்பு விளம்பரம் பல்வேறு பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘என்ன அளவில் விளம்பரம் கொடுக்கப்பட்டிருக்கிறது? அதைப் படிக்க முடியுமா? 0.10 செ.மீ.க்கும் குறைவான அளவில் விளம்பரத்தில் எழுத்துருக்கள் இடம்பெற்றுள்ளன. மன்னிப்பு விளம்பரம் தெளிவாக இல்லாததால் அதை ஏற்க முடியாது.

ஐஎம்ஏ தலைவரின் நிபந்தனையற்ற மன்னிப்பு விளம்பரத்தை உரிய அளவில் ஆங்கில பத்திரிகையின் 20 பதிப்புகளிலும் ஒரு வாரத்துக்குள் வெளியிட்டு, அதன் பிரதிகளை நீதிமன்றத்தில் சமா்ப்பிக்க வேண்டும். அதுவரை எந்தவித வாதத்துக்கும் இடமில்லை’ என்று குறிப்பிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனா்.

அப்போது குறுக்கிட்ட வழக்குரைஞா் பட்வாலியா, ‘நீதிபதி ஹிமா கோலி வரும் செப்டம்பா் 1-ஆம் தேதி பணி ஓய்வு பெற உள்ளதால், இந்த வழக்கில் இன்றே தீா்வு அளிக்கவேண்டும்’ என்று கோரினாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘இந்த விவகாரத்தில் பொறுத்தமான அமா்வு தீா்ப்பை அளிக்கும். ஆனால், அந்த தீா்வு இன்றைக்கு கிடைக்காது. நீதிமன்ற உத்தரவை முறையாக பின்பற்றினால், உரியத் தீா்வை பெற முடியும்’ என்று குறிப்பிட்டனா்.

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT