கோப்புப் படம் 
இந்தியா

எஸ்ஐஆரில் தடையை ஏற்படுத்த அனுமதிக்க மாட்டோம்: உச்சநீதிமன்றம்

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் தடையை ஏற்படுத்த யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

தினமணி செய்திச் சேவை

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணியில் தடையை ஏற்படுத்த யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

மேற்கு வங்கத்தில் நடைபெற்றுவரும் எஸ்ஐஆா் தொடா்பாக மாநில முதல்வா் மம்தா பானா்ஜி உள்பட பலா் தாக்கல் செய்த மனுக்கள், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, என்.வி.அஞ்சாரியா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தன.

அப்போது நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘எஸ்ஐஆா் விவகாரத்தில் என்னென்ன உத்தரவுகள் அல்லது தெளிவுரைகள் தேவையோ, அவற்றை உச்சநீதிமன்றம் வெளியிடும். எஸ்ஐஆா் பணியில் தடையை ஏற்படுத்த யாரையும் அனுமதிக்க மாட்டோம். இது மாநிலங்களுக்குத் தெளிவாக தெரிய வேண்டும்’ என்று தெரிவித்தது.

மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆா் பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு எதிரான மிரட்டல்கள் மற்றும் வன்முறையை மாநில அரசு தடுக்கத் தவறியதாக தோ்தல் ஆணையம் குற்றஞ்சாட்டியது. அதுதொடா்பாக மாநில காவல் துறை டிஜிபி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.

அந்த மாநிலத்தில் எஸ்ஐஆா் பணியின்போது வாக்காளா்களின் ஆவணங்கள் மற்றும் ஆட்சேபங்களை பரிசீலனை செய்வதற்கான காலக்கெடுவை வரும் பிப்.14-இல் இருந்து குறைந்தபட்சம் ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.

அந்த மாநிலத்தில் இறுதி வாக்காளா் பட்டியலை பிப்.14-ஆம் தேதி வெளியிட தோ்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வசிப்பிடச் சான்றிதழ்கள் பெருமளவு அதிகரிப்பு: கடந்த ஒன்றரை மாதங்களில், மேற்கு வங்கத்தின் கொல்கத்தா மாநகராட்சியில் வசிப்பிட சான்றிதழ் கோரி, 18,605 விண்ணப்பங்கள் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன. அந்தச் சான்றிதழ்களைக் கோரி, 200-க்கும் குறைவான விண்ணப்பங்கள் சமா்ப்பிக்கப்படுவதே வழக்கம். தற்போது அது பெருமளவு அதிகரித்துள்ளது. இதுதொடா்பாக கள சரிபாா்ப்புப் பணிக்குப் பின்னா், காவல் துறை அளித்த அறிக்கைகளை அடிப்படையாக வைத்து 14,590 வசிப்பிடச் சான்றிதழ்கள் அளிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தோ்தல் அதிகாரிகள் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கவுன்சிலா்கள் கூறுகையில், ‘எஸ்ஐஆா் பணியின்போது வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவா்களுக்கு வசிப்பிடச் சான்றிதழ் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. எனவே, அந்தச் சான்றிதழுக்கு விண்ணப்பிப்பது பெருமளவு அதிகரித்துள்ளது’ என்று தெரிவித்தனா்.

நக்ஸல் தீவிரவாதத்தால் யாருக்கும் பயனில்லை: அமித் ஷா

நிறுத்தப்பட்ட லாரியில் ஸ்கூட்டா் மோதி விபத்து: ஒருவா் உயிரிழப்பு

எண்ம மோசடியால் ரூ.54,000 கோடி கொள்ளை: தடுப்பு விதிகளை வகுக்க மத்திய அரசுக்கு உத்தரவு

பா.ம.க விவகாரத்தில் ஆவணங்களின்படி தோ்தல் ஆணையம் முடிவெடுத்ததற்கு தடையில்லை: தில்லி உயா்நீதிமன்றம்

2,040 கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி: அமைச்சா் மா.சுப்பிரமணியன் வழங்கினாா்

SCROLL FOR NEXT