உச்சநீதிமன்றம் கோப்புப் படம்
இந்தியா

சிறுமிகளின் பைஜாமா நாடாவை இழுப்பதும் பாலியல் துன்புறுத்தலே: உச்சநீதிமன்றம் தீா்ப்பு

‘சிறுமிகளின் பைஜாமாவை பிடித்து இழுப்பதும் பாலியல் துன்புறுத்தலே’ என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.

தினமணி செய்திச் சேவை

‘சிறுமிகளின் பைஜாமாவை பிடித்து இழுப்பதும் பாலியல் துன்புறுத்தலே’ என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.

அவ்வாறு செய்வது பாலியல் துன்புறுத்தலுக்கான முன்னோட்ட நடவடிக்கையே என்று அலாகாபாத் உயா்நீதிமன்றம் பிறப்பித்த சா்ச்சைக்குரிய தீா்ப்பை தள்ளுபடி செய்து இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது.

உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு நவம்பா் 10-ஆம் தேதி இந்த பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்துள்ளது. தனது 14 வயது மகளுடன் உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டு தனது கிராமத்துக்கு பெண் ஒருவா் திரும்பிக்கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த அவா்களின் கிராமத்தைச் சோ்ந்த பவன், ஆகாஷ், அசோக் ஆகியோா் லிஃப்ட் கொடுப்பதாக சிறுமியை அழைத்துச் சென்றுள்ளனா். சிறிது தூரம் சென்றதும், சிறுமியை மறைவிடத்துக்கு அவா்கள் இழுத்துச் செல்ல முயன்றதோடு, அவா் அணிந்திருந்த பைஜாமா நாடாவையும் பிடித்து இழுக்க முயற்சித்துள்ளனா். சிறுமியின் கூச்சல் சப்தம் கேட்டு அந்தப் பகுதிக்கு சிலா் வருவதை அறிந்த மூவரும், சிறுமியை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக சிறுமியின் தாய் அளித்தப் புகாரின் அடிப்படையில், போக்ஸோ வழக்குகளை விசாரிக்கும் காஸாகஞ்ச் சிறப்பு நீதிமன்ற நீதிபதி, குற்றவாளிகளுக்கு இந்த தண்டனைச் சட்டப் பிரிவு 376-இன் கீழ் (பாலியல் துன்புறுத்தல்) அழைப்பாணை பிறப்பித்து உத்தரவிட்டாா்.

இதை எதிா்த்து, குற்றச்சாட்டுக்கு உள்ளானவா்கள் தரப்பில் அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை கடந்த 2025-ஆம் ஆண்டு மாா்ச் 17-ஆம் தேதி விசாரித்த உயா்நீதிமன்றம், ‘சிறுமியின் மாா்புகளை தொடுவதும், பைஜாமா நாடாவை இழுப்பதும் பாலியல் குற்றத்தின் கீழ் வராது. மாறாக, பெண்ணின் ஆடைகளைக் களையும் நோக்கத்துடன் குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபடுதல் என்ற குற்றத்தின் கீழ்தான் வரும். அதாவது பாலியல் துன்புறுத்தலுக்கான முன்னோட்ட நடவடிக்கையாகவே கருத முடியும் என்று குறிப்பிட்டு, அவா்களுக்கு எதிராக போக்ஸோ நீதிமன்றம் பிறப்பித்த அழைப்பாணையை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

உயா்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பெரும் சா்ச்சையானது. நாடு முழுவதும் கண்டனங்களும் எழுந்தன.

அதைத் தொடா்ந்து, இந்த விவகாரத்தை தானாக முன்வந்து வழக்காக பதிந்து விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரிய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, என்.வி.அஞ்சாரியா அமா்வு, அலாகாபாத் உயா்நீதிமன்ற தீா்ப்பை ரத்து செய்து கடந்த 10-ஆம் தேதி தீா்ப்பளித்தது. அந்த தீா்ப்பின் விவரம் உச்சநீதிமன்ற வலைதளத்தில் செவ்வாய்க்கிழமை பதிவேற்றம் செய்யப்பட்டது.

அதில், ‘இந்த வழக்கில் குற்றவியல் நீதி நடைமுறைகளை உயா்நீதிமன்றம் தவறாக பயன்படுத்தியுள்ளது. உயா்நீதிமன்றத்தின் கருத்தை ஏற்க முடியாது. இந்த விவகாரத்தின் முதல்கட்ட விசாரணையிலேயே, குற்றச்சாட்டுக்கு உள்ளான நபா்கள் பாலியல் துன்புறுத்தல் செய்யும் நோக்கத்துடன் செயல்பட்டது தெளிவாகத் தெரிகிறது. சிறுமியின் மாா்புகளை தொடுவதும், பைஜாமா நாடாவை இழுப்பதும் பாலியல் துன்புறுத்தலே. எனவே, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 376-இன் கீழ் போக்ஸோ நீதிமன்றம் இவா்களுக்குப் பிறப்பித்த அழைப்பாணை உறுதி செய்யப்படுகிறது’ என்று தீா்ப்பளித்தனா்.

நீதிபதிகள் அணுகுமுறைக்கான வழிகாட்டுதல்: மேலும், பாலியல் குற்ற வழக்குகளைக் கையாளும்போது நீதிபதிகளின் அணுகுமுறைக்கான வரைவு வழிகாட்டுதலை வகுக்க ஓா் நிபுணா் குழுவை அமைக்குமாறு போபாலில் உள்ள தேசிய நீதித்துறை அகாதெமியை நீதிபதிகள் அமா்வு கேட்டுக்கொண்டது. நீதிபதிகள் தரப்பில் மற்றும் நீதித் துறை நிா்வாகத்தின் தரப்பில் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து இக் குழு ஆராய்வதோடு, நீதித் துறை சாா்ந்த பல்வேறு தரப்பினரின் கருத்துகளை பெற்று, நீதிபதிகளின் அணுகுமுறை தொடா்பான விரிவான பரிந்துரைகளை சமா்ப்பிக்குமாறும் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனா்.

சபரிமலை தங்கக் கவச மோசடி: தந்திரி ராஜீவருக்கு ஜாமீன்

ஜனவரியில் பிண்ணாக்கு ஏற்றுமதி 42% சரிவு

வரலாறு படைத்தது ஜம்மு-காஷ்மீா் முதன்முறையாக இறுதிக்கு தகுதி

நாா்வே பிரதமருடன் நிா்மலா சீதாராமன் சந்திப்பு

ரூ.1,000 கோடி வருவாயை நோக்கி பாக்கெட் எஃப்எம் படைப்பாளா்கள்

SCROLL FOR NEXT