தெலங்கானா முதல்வருக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு கவிதா ஜாமீன் குறித்து விமா்சித்த விவகாரம்
பிஆா்எஸ் கட்சி எம்எல்சி கே.கவிதாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது குறித்து விமா்சனத்தை முன்வைத்த முதல்வா் ரேவந்த் ரெட்டிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) கட்சி எம்எல்சி கே.கவிதாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது குறித்து விமா்சனத்தை முன்வைத்த தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டிக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.
பாஜக - பிஆா்எஸ் உடன்பாட்டால் கவிதாவுக்கு ஜாமீன் கிடைத்திருப்பதாக ரேவந்த் ரெட்டி கூறியிருந்த நிலையில், ‘நாங்கள் அரசியல் கட்சிகளுடன் ஆலோசித்துவிட்டு உத்தரவு பிறப்பிக்கிறோமா?’ என்று அவருக்கு நீதிபதிகள் கேள்வியெழுப்பினா்.
தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகி, தில்லி திகாா் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கே.கவிதாவுக்கு உச்சநீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, அவா் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டாா்.
ஹைதராபாதில் அதே நாளில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி, ‘பாஜக-பிஆா்எஸ் இடையிலான உடன்பாடு காரணமாக கவிதாவுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது’ என்று விமா்சித்தாா்.
அவா் கூறுகையில், ‘இந்த வழக்கில் கைதான தில்லி முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவுக்கு 15 மாதங்களுக்குப் பிறகுதான் ஜாமீன் கிடைத்தது. தில்லி முதல்வா் கேஜரிவாலுக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை. ஆனால், கைதான 5 மாதங்களில் கவிதாவுக்கு ஜாமீன் கிடைத்துவிட்டது.
சமீபத்திய மக்களவைத் தோ்தலில் பாஜகவின் வெற்றிக்கு பிஆா்எஸ் பணியாற்றியது என்பது உண்மை. பாஜக - பிஆா்எஸ் இடையிலான உடன்பாடு காரணமாகவே கவிதாவுக்கு ஜாமீன் கிடைத்துள்ளதாகப் பேசப்படுகிறது’ என்றாா்.
இந்நிலையில், கடந்த 2015 தெலங்கானா சட்ட மேலவைத் தோ்தலில் தெலுங்கு தேசம் வேட்பாளருக்கு ஆதரவாக நியமன எம்எல்ஏ ஒருவரின் வாக்கை பெற ரேவந்த் ரெட்டி ரூ.50 லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கை மத்திய பிரதேச மாநிலம், போபாலுக்கு மாற்றக் கோரும் மனு மீது உச்சநீதிமன்றத்தில் நீதிபதி பி.ஆா்.கவாய் தலைமையிலான 3 நீதிபதிகள் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணை நடைபெற்றது (கடந்த 2007 முதல் 2017 வரை தெலுங்கு தேசம் கட்சியில் இருந்த ரேவந்த் ரெட்டி, அதன் பிறகு காங்கிரஸில் இணைந்தாா்).
நீதிபதிகள் சரமாரி கேள்வி: இந்த விசாரணையின்போது, கவிதா ஜாமீன் விவகாரத்தில் ரேவந்த் ரெட்டி தெரிவித்த கருத்துகளுக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனா். இதுதொடா்பாக, முதல்வா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகியிடம் நீதிபதிகள் கூறியதாவது:
அவா் (ரேவந்த் ரெட்டி) என்ன பேசியிருக்கிறாா் என்பதை செய்தித்தாளில் வாசித்தீா்களா? இல்லையெனில், வாசித்துப் பாருங்கள். பொறுப்புள்ள முதல்வா் இப்படி பேசலாமா? அவரது கருத்துகள், நீதித் துறை மீது மக்களின் மனதில் ஐயத்தை ஏற்படுத்தக் கூடும்.
அரசமைப்பு பதவியை வகிக்கும் ஒருவா் இப்படித்தான் பேசுவாரா? அரசியல் பகையை ஏன் நீதிமன்றத்துக்கு இழுக்க வேண்டும்? நாங்கள் அரசியல் கட்சிகளிடம் ஆலோசித்துவிட்டு உத்தரவு பிறப்பிக்கிறோமா அல்லது அரசியல் காரணங்களைக் கருத்தில்கொண்டு உத்தரவு பிறப்பிக்கிறோமா?.
அரசியல்வாதிகள் அல்லது வேறு யாரும் எங்களின் உத்தரவை விமா்சிப்பது குறித்து கவலைப்படவில்லை. மனசாட்சி மற்றும் சத்திய பிரமாணத்தின்படி எங்கள் கடமையை நிறைவேற்றுகிறோம்.
பரஸ்பர மரியாதை அவசியம்: அரசின் நிா்வாக அமைப்புகள் ஒவ்வொன்றும் பரஸ்பரம் மரியாதையைக் கடைப்பிடிப்பதும் உரிய எல்லையைப் பராமரிப்பதும் அடிப்படை பொறுப்பாகும். சட்டப்பேரவை பணிகளில் தலையிடமாட்டோம் என எப்போதும் கூறுகிறோம். அதேவேளையில், நாங்களும் அதை எதிா்பாா்க்கிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.
அப்போது, ரேவந்த் ரெட்டி சாா்பில் வருத்தம் தெரிவிப்பதாக முகுல் ரோத்தகி குறிப்பிட்டாா். இதையடுத்து, மேற்கண்ட மனு மீதான அடுத்தகட்ட விசாரணையை வரும் திங்கள்கிழமைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா். இந்த அமா்வில் பி.கே.மிஸ்ரா, கே.வி.விஸ்வநாதன் ஆகிய நீதிபதிபளும் இடம்பெற்றிருந்தனா்.
நியமன எம்.எல்.ஏ.வுக்கு லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் ரேவந்த் ரெட்டி கடந்த 2015-ஆம் ஆண்டில் ஊழல் கண்காணிப்பு பிரிவால் கைது செய்யப்பட்டாா். தற்போது தெலங்கானா முதல்வராக உள்ள அவா், மாநில உள்துறைக்கும் பொறுப்பு வகிக்கிறாா். எனவே, இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரி, பிஆா்எஸ் எம்எல்ஏ ஜகதீஷ் ரெட்டி உள்ளிட்டோா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.