டேஹ்ராடூன்; டேஹ்ராடூரன் மற்றும் காஸியாபாத் பகுதிகளில் வாழும் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன நிலையில், ஒரே நபர், இரண்டு குடும்பங்களிலும் மகன் என்று சொல்லி இணைந்திருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.
உண்மையில், அந்த நபர் யார், எவ்வாறு இரண்டு குடும்பங்களிலும் அவர் இணைந்தார் என்பது குறித்து இரு பகுதி காவல்துறையினரும் ஆராய்ந்து வருகிறார்கள்.
கிடைத்திருக்கும் அந்த இளைஞரின் அடையாளம் தெரியவில்லை. இவர் முதலில் டேஹ்ராடூனில் உள்ள குடும்பத்துடன் கடந்த ஜூலை மாதம் இணைந்துள்ளார். அவர்கள் வீட்டில் 16 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மோனு ஷர்மா என்று அடையாளம் கூறப்பட்டார். தான் காணாமல் போன போது யாரோ சிலர் ராஜஸ்தான் அழைத்துச் சென்றுவிட்டதாகக் கூறியிருந்தார்.
இதையும் படிக்க.. 1993ல் கடத்தப்பட்ட சிறுவன் 30 ஆண்டுகளுக்குப் பின் குடும்பத்தினருடன் சேர்ந்ததன் பின்னணி?
இதற்கிடையே, கடந்த சனிக்கிழமை அவர் காஸியாபாத்தில் உள்ள மற்றொரு குடும்பத்தில் சேர்ந்தார். அங்கு 30 ஆண்டுகளுக்க முன்பு காணாமல் போன பீம் சிங் என்று கூறியிருக்கிறார்.
இந்த நிலையில், ஆங்கில ஊடகத்தினர் இருவரும் ஒரே நபர்தான் என்பதை அடையாளம் கண்டு செய்தி வெளியிட்ட நிலையில், காஸியாபாத் காவல்துறையினர் அந்த நபரை பிடித்துச் சென்றிருக்கிறார்கள் விசாரணை நடத்த.
டேஹ்ராடூன் காவல்துறையினர், காஸியாபாத் காவல்துறையை தொடர்புகொண்டு ஒரே இளைஞரைத்தான் இரு வேறு குடும்பங்களில் சேர்த்திருப்பது குறித்து தகவல் கொடுத்து, தனித்தனியாக விசாரணையைத் தொடங்கியிருக்கிறார்கள்.
இது குறித்து, டேஹ்ராடூன் காவலர்கள் கூறுகையில், அவருக்கு மனநலப் பிரச்னை இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். ஆறு மாதங்களுக்கு முன்பு டேஹ்ராடூன் குடும்பத்தினருடன் சேர்த்துவைத்தோம். ஆனால் அங்கிருந்து அவர் பணத்தையோ எந்த விலையுயர்ந்த பொருள்களையோ திருடியதாக அவர்கள் குற்றம்சாட்டவில்லை. தான் சிறுவயதில் கடத்தப்பட்டது குறித்து அவர் ஒரு கதை சொல்கிறார். ஆனால், புது புது நகரங்களுக்குச் செல்லும்போது அதனை சற்று மாற்றிவிடுகிறார். உண்மையைக் கண்டறிய இரு நகர காவல்துறையினரும் விசாரணையைத் தொடங்கியிருக்கிறார்கள்.
காஸியாபாத் காவல்துறையினர், அந்த இளைஞர் பயன்படுத்திய செல்போனைத் தேடி வருகிறார்கள். அவர் நிரஞ்சன்பூர் காய்கறி சந்தையில் பணியாற்றியதாகக் கூறும்போது பயன்படுத்திய செல்போன் எண் கடைசியாக காஸியாபாத்தின் இந்திராபுரம் பகுதியில் செல்போன் கோபுரத்தில் இணைந்ததாகக் காட்டுகிறது. ஆனால், இதுவரை செல்போன் கிடைக்கவில்லை. எனவே, அந்த செல்போன் கிடைத்தால், உண்மையில் இந்த இளைஞர் யார் என்பதை கண்டுபிடிக்க முடியும்? எங்கு சென்றார், இந்தக் குடும்பங்களைப் பற்றிய தகவல்களை அவர் எவ்வாறு அறிந்துகொண்டார் என்பதை அறிய முடியும் என்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.