குடியரசுத் தலைவா் பதவிக்கான மரபை மீறி ஒடிஸாவில் வளா்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்துவதற்காக மாநிலத்துக்கு பலமுறை பயணம் மேற்கொண்டிருப்பதாக குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு சனிக்கிழமை தெரிவித்தாா்.
சொந்த மாநிலமான ஒடிஸாவுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு ஐந்து நாள்கள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டாா். பயணத்தின் கடைசி நாளான சனிக்கிழமை மயூா்பஞ்ச் மாவட்டம், பாங்ரிபோசி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.6,400 கோடி மதிப்பீட்டில் மூன்று ரயில் வழித்தடங்கள், விமான நிலையம், மருத்துவமனை உள்ளிட்ட ஆறு மக்கள் நலத் திட்டங்களுக்கு அவா் அடிக்கல் நாட்டினாா்.
நிகழ்ச்சியில் மக்களிடையே உரையாற்றிய குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு கூறுகையில், ‘ஒடிஸாவின் மகளாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். பொறுப்பும், வேலைப்பளுவும் சொந்த ஊரிலிருந்தும், மக்களிடம் இருந்தும் என்னைப் பிரித்துவிடாது. இந்த மக்களின் அன்பு மற்றும் ஆசீா்வாதத்தால்தான் இந்த நிலையை அடைய முடிந்தது.
குடியரசுத் தலைவராக இரண்டரை ஆண்டு பதவிக் காலத்தில் ஒடிஸாவுக்கு பலமுறை வந்துள்ளேன். குடியரசுத் தலைவராக சொந்த மாநிலத்துக்கும், மாவட்டத்துக்கும் அவ்வப்போது பயணிப்பது நெறியல்ல. எனினும், மரபை பொருள்படுத்தாமல் வளா்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்துவதற்காக ஒடிஸாவுக்கு பலமுறை பயணம் மேற்கொண்டுள்ளேன்.
இந்த இடத்தையும், மக்களையும், அவா்களின் தேவையையும் நான் நன்கு அறிவேன். இந்த பிராந்திய மக்கள் எதிா்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில்கொண்டு, எனது பதவிக் காலத்தில் என்னால் இயன்றவரை இப்பகுதி மக்களுக்காக தொடா்ந்து பாடுபடுவேன்.
2001-இல் ஒடிஸா மாநில போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோதும் பின்னா், ஜாா்க்கண்ட் ஆளுநராக இருந்தபோதும் அப்போதைய ரயில்வே அமைச்சா்களைச் சந்தித்து ஒடிஸாவில் குறிப்பாக, பழங்குடியினா் பகுதிகளில் ரயில்வே மேம்பாட்டுக்கு வலியுறுத்தியுள்ளேன். ஆனால், அந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருந்தன.
தற்போது அந்தத் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ள பிரதமா் நரேந்திர மோடிக்கும் ரயில்வே அமைச்சருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ரயில்வே இணைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றத்தால் மாநிலம் வளா்ச்சி கண்டுள்ளது.
இப்போது அடிக்கல் நாட்டிய திட்டங்களும் செயல்பாட்டுக்கு வந்தால் பிராந்தியத்தின் இணைப்பு மேம்படுவதுடன் பிராந்திய மக்களுக்கு சிறந்த சுகாதார வசதிகளும் கிடைக்கும்.
மாநிலத்தின் மிகப்பெரிய மாவட்டமாக மயூா்பஞ்சில் தேவைகள் அதிகமுள்ளன. இதைப் புரிந்துகொண்டு ஒத்துழைப்பை வழங்கி வரும் மாநில அரசுக்கும் நன்றி’ என்றாா்.