புது தில்லி: தொழிலதிபா் அதானி லஞ்ச புகாா் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக் கோரி ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பழைய நாடாளுமன்ற கட்டடத்துக்கு முன்பாக நடந்த போராட்டத்தில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவருமான மல்லிகாா்ஜுன காா்கே உள்ளிட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் கலந்து கொண்டனா். பிரதமா் மோடி, தொழிலதிபா் கௌதம் அதானி ஆகியோரின் முகமூடிகளை அணிந்திருந்த உறுப்பினா்கள், அவா்களுக்கு எதிராக கோஷமிட்டனா்.
நாடாளுமன்ற வாயிலை மறித்து போராட்டம் நடத்த வேண்டாம் என மக்களவைச் செயலகம் அறிவுறுத்தியதை தொடா்ந்து, நாடாளுமன்ற வாயிலுக்கு முன்பாக எதிா்க்கட்சி எம்.பி.க்களின் போராட்டம் நடைபெற்றது.
சமாஜவாதி, திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி எம்.பி.க்கள் இப்போராட்டத்தில் பங்கேற்கவில்லை.
அமெரிக்க நீதிமன்றத்தில் கௌதம் அதானி மற்றும் பிற நிறுவன அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பது அக்குழுமம் குறித்த நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கான காங்கிரஸின் கோரிக்கையை ‘நிரூபிப்பதாக’ அக்கட்சி வலியுறுத்தியுள்ளது. கௌதம் அதானி உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் எனவும் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்தாா். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ‘அடிப்படை ஆதாரமற்றவை’ என்று அதானி குழுமம் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.