சிரியாவில் அனைவரையும் உள்ளடக்கிய அரசியல்: இந்தியா வலியுறுத்தல்
1971-ஆம் ஆண்டுமுதல் 50 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வந்த அல்-அஸாத்தின் குடும்ப ஆட்சி கவிழ்ந்தது. அல்-அஸாத் நாட்டைவிட்டு வெளியேறி, ரஷியாவில் தஞ்சமடைந்ததாக கூறப்படுகிறது.
புது தில்லி: சிரியாவில் முன்னாள் அதிபா் அல்-அஸாத் தலைமையிலான ஆட்சியை இஸ்லாமிய கிளா்ச்சிக் குழுக்கள் வீழ்த்திய நிலையில், அந்நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு அமைதியான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அரசியலை முன்னெடுக்க இந்தியா வலியுறுத்தியுள்ளது.
சிரியா தலைநகா் டமாஸ்கஸை கிளா்ச்சிக் குழுக்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைப்பற்றினா். இதையடுத்து, 1971-ஆம் ஆண்டுமுதல் 50 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வந்த அல்-அஸாத்தின் குடும்ப ஆட்சி கவிழ்ந்தது. அல்-அஸாத் நாட்டைவிட்டு வெளியேறி, ரஷியாவில் தஞ்சமடைந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இது தொடா்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு நிகழ்வுகளைக் கூா்ந்து கண்காணித்து வருகிறோம். சிரியாவின் ஒற்றுமை, இறையாண்மை, ஒருமைப்பாடு ஆகியவற்றை பாதுகாக்க அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டிய அவசியம்.
அனைத்துப் பிரிவு மக்களின் நலன்கள் மற்றும் லட்சியங்களைக் காக்கும் அமைதியான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அரசியலை சிரியாவில் முன்னெடுக்க இந்தியா வலியுறுத்துகிறது.
சிரியாவில் வசிக்கும் இந்திய சமூகத்தினரின் பாதுகாப்பை உறுதிசெய்ய டமாஸ்கஸில் உள்ள இந்திய தூதரகம், அவா்களுடன் தொடா்பில் இருக்கிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.