மக்களவையில் இன்றும் அதானி விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டதால், அவை நடவடிக்கை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக, மக்களவை இன்று காலை கூடியதும், அதானி விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கமிட்டதாலும், கேள்வி நேரத்தின்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு விவகாரங்களை எழுப்பி கேள்வி கேட்டதாலும், பகல் 12 மணி வரை ஒத்திவைத்து அவைத் தலைவர் உத்தரவிட்டார்.
பிறகு, அவை 12 மணிக்குக் கூடியதும் நீதி வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கமிட்டனர். இதனால் அவை நடவடிக்கையை தொடர முடியாமல் மீண்டும் அவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
அவையிலிருந்து வெளியே வந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள், நாடாளுமன்ற வளாகத்தில் நின்றபடி கையில் பிரதமர் மோடி, அதானி உள்ளிட்டோரின் முகப் படங்களை வைத்துக்கொண்டு மணிப்பூர் வன்முறை, அதானி லஞ்சம் கொடுத்த விவகாரம், சம்பல் மோதல் விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
அனைவரும் ஒன்றிணைந்து, மோடி, அதானி இருவருமே ஒன்றுதான், எங்களுக்கு நியாயம் வேண்டும் என்று தொடர்ந்து முழக்கமிட்டனர்.
மாநிலங்களவையில் பாஜகவினர் அமளி
காங்கிரஸ் கட்சியினருக்கும் காஷ்மீர் பிரிவினையை ஆதரித்த அறக்கட்டளைக்கும் தொடர்பு இருந்ததாக வெளியான விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் இன்று பாஜக உள்ளிட்ட ஆளுங்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.