புதுதில்லி: மோசடி மற்றும் 265 மில்லியன் டாலர் லஞ்ச வழக்கில் கௌதம் அதானி மற்றும் சாகர் அதானி ஆகியோருக்கு சம்மன் அனுப்ப அமெரிக்கப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் நீதிமன்றத்தின் அனுமதி கோரியுள்ளதாக வெளியான செய்திகளையடுத்து, அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் 13% வரை சரிந்தன.
குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் பங்கின் விலை 9.38% சரிந்து பங்கு ஒன்றுக்கு ரூ.1,891.60 ஆகவும், அதானி பவர் 8.84% சரிந்து ரூ.128.35 ஆகவும், அதானி போர்ட்ஸ் 7.81% சரிந்து ரூ.1,303.35 ஆகவும், அதானி டோட்டல் கேஸ் 7.55% சரிந்து ரூ.507ஆக வர்த்தகமானது.
டிசம்பர் 2025 வரையான காலாண்டு முடிவுவை தொடர்ந்து, அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் ரூ.5 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபத்தைப் பதிவு செய்ததையடுத்து, அதன் பங்கின் விலை 13.20% சரிந்து ரூ.785ஆக உள்ளது.
கடந்த ஆண்டு இதே காலாண்டில் ஈட்டிய ரூ.474 கோடி நிகர லாபத்துடன் ஒப்பிடுகையில், ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் இது 99% வீழ்ச்சியாகும்.
அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் லிமிடெட், டிசம்பர் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 8 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை சந்தித்து ரூ.574.06 கோடியாக இருப்பதாக தெரிவித்ததையடுத்து, அதன் பங்குகள் 10.57% சரிந்து ரூ.827.20 உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.