கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் நிகழ்த்தப்பட்ட கொலை வழக்கில், முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் கொலை நிகழ்ந்த ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் கைது செய்யப்பட்ட நிலையில், இப்போது அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருப்பது, உயிரிழந்த மருத்துவர் குடும்பத்தினரை மட்டுமல்லாது சக மருத்துவர்கள் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ், தாலா காவல்நிலைய அதிகாரி அபிஜித் மோண்டால் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதியப்பட்ட 90 நாள்களுக்குள் சிபிஐ குற்றப்பத்திரிகை பதியத்தவறிவிட்டதைச் சுட்டிக்காட்டி மேற்கண்ட இருவரும் கொல்கத்தாவிலுள்ள சியால்டாஹ் நீதிமன்றத்தால் வெள்ளிக்கிழமை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ‘மேற்கு வங்க இளநிலை மருத்துவர்கள் முன்னணியைச்’ சேர்ந்த மருத்துவர்களுடன் ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பேரணி மற்றும் போராட்டத்தில் உயிரிழந்த மருத்துவரின் பெற்றோர்களும் பங்கேற்றனர். மறுபுறம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இன்று (டிச. 14) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து உயிரிழந்த மருத்துவரின் தந்தை இன்று (டிச. 14) செய்தியாளர்களுடன் பேசியதாவது, “எங்கெல்லாம் போராட்டம் நடைபெறுகிறதோ அங்கு சென்று கலந்துகொள்வோம். இதுவே இப்போதிருக்கும் ஒரே வழி.
சிபிஐ இதுவரை ஒரு குற்றப்பத்திரிகை கூட பதிவு செயயவில்லை. மிகுந்த வேதனையில் இருக்கிறேன். இன்னும் அதிக பலத்துடன் நாங்கள் போராட வேண்டும். அப்போதுதான் ஏதாவது நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிகிறது.
நாங்கள் நீதிமன்றத்தில் நியாயம் கோரி மன்றாடியபோது, இந்த வழக்கை, சிபிஐ விசாரணை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், சிபிஐ தமது கடமையை சரிவர செய்யவில்லை.
போராட்டங்களில் ஈடுபடும்போது சிபிஐ முறையாக கடமையைச் செய்கிறது. அதனால்தான் கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், போராட்டங்களை நிறுத்தியவுடன், சிபிஐயும் விசாரணை நடவடிக்கைகளை நிறுத்திக்கொண்டது.
ஒருவேளை போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டிருந்தால், சிபிஐ குற்றப்பத்திகையை பதவு செய்திருக்கக்கூடும்” என்றார்.
இதனிடையே, கொல்கத்தாவில் மருத்துவர்கள் பலர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.