இந்தியா

அமித் ஷாவுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கினார் கார்கே!

அமித் ஷாவுக்கு எதிராக மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

DIN

அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவ. 25 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை பேசிய அமித் ஷா, அம்பேத்கரை அவமதிக்கும் கருத்துகளை தெரிவித்ததாக எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

அமித் ஷா, ‘அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்குப் பதிலாக, இவ்வளவு முறை கடவுளின் பெயரை உச்சரித்திருந்தால், சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும்' என்று கூறியிருந்தார்.

இதன்தொடர்ச்சியாக, நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக அமித் ஷாவை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக அமித் ஷா விலக வேண்டும் என்றும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

'டிசம்பர் 17 அன்று மாநிலங்களவையில் டாக்டர் அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசியதற்காக மத்திய உள்துறை அமைச்சருக்கு எதிராக மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கியுள்ளார்' என காங்கிரஸ் தகவல் தெரிவித்துள்ளது.

'நாடாளுமன்ற மாநிலங்களவையில் கடந்த டிச. 17 அன்று பேசிய அமித் ஷா, அவையின் சிறப்புரிமையை மீறும் வகையிலும் அவையை அவமதிக்கும் வகையிலும் கருத்துகளை கூறியுள்ளார். அவர் பேசும் தொனியும் அம்பேத்கரையும் அரசியலமைப்பையும் அவமதிக்கும் வகையில் இருந்தது. எனவே நாடாளுமன்ற விதிகள் மற்றும் சட்டத்தின்படி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாடா பவர் லாபம் ரூ.1,262 கோடியாக அதிகரிப்பு!

தேசிய விருது பெற்ற ஜி.வி.பிரகாஷ்! தனுஷுக்கு நன்றி!

திண்டிவனம் - கடலூர் இடையே புதிய ரயில் வழித்தடம்: அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்!

பிரபல கல்வியாளர் வசந்தி தேவி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

இந்தியாவுக்கு எதிராக பென் டக்கெட் - ஸாக் கிராலி இணை சாதனை!

SCROLL FOR NEXT