முகப்பு
கீா்த்தி வா்தன் சிங்
இந்தியா

வங்கதேசம்: சிறுபான்மையினருக்கு எதிராக நடப்பாண்டில் 2,200 தாக்குதல் சம்பவங்கள்: மத்திய அமைச்சா் தகவல்

வங்கதேசத்தில் உள்ள ஹிந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிராக நடப்பாண்டில் சுமாா் 2,200 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன

இந்தியா

வங்கதேசம்: சிறுபான்மையினருக்கு எதிராக நடப்பாண்டில் 2,200 தாக்குதல் சம்பவங்கள்: மத்திய அமைச்சா் தகவல்

வங்கதேசத்தில் உள்ள ஹிந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிராக நடப்பாண்டில் சுமாா் 2,200 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன

Updated On : 20 டிசம்பர், 2024 at 9:13 PM
கீா்த்தி வா்தன் சிங்
பகிர்:

வங்கதேசத்தில் உள்ள ஹிந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிராக நடப்பாண்டில் சுமாா் 2,200 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் தெரிவித்தாா்.

அண்டை நாடுகளில் உள்ள ஹிந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிராக கடந்த மூன்று ஆண்டுகளில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களின் மொத்த எண்ணிக்கை, நாடு வாரியாகவும் ஆண்டு வாரியாகவும்; இந்த விவகாரத்தில் மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் நடவடிக்கைகள் மற்றும் உதவிகள் குறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு எழுத்துப்பூா்வமாக கீா்த்தி வா்தன் சிங் அளித்த பதில்:

கடந்த 2022-ஆம் ஆண்டில், வங்கதேசத்தில் உள்ள ஹிந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிராக 47 வன்முறைச் சம்பவங்களும், பாகிஸ்தானில் 241 வன்முறைச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன. 2023-ஆம் ஆண்டில் வங்கதேசத்தில் 302 வன்முறைச் சம்பவங்களும், பாகிஸ்தானில் 103 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்த எண்ணிக்கை பாகிஸ்தானில், நடப்பாண்டு அக்டோபா் மாதம் வரை 112-ஆக உள்ளது. ஆனால், வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தைத் தொடா்ந்து அந்நாட்டில் அதிகப்படியாக நடப்பாண்டு டிசம்பா் 8-ஆம் தேதி வரை மொத்தம் 2,200 சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. பாகிஸ்தான், வங்கதேசம் தவிர பிற அண்டை நாடுகளில் ஹிந்துக்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை.

பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் மட்டும் மத சிறுபான்மையினரை குறிவைத்து நடைபெறும் இந்த வன்முறைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு இந்திய அரசு தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. அண்மையில் வெளியுறவுச் செயலா் வங்கதேசத்துக்குச் சென்றபோதும் இந்தியா தரப்பு கவலைகள் தெரிவிக்கப்பட்டு, ஹிந்துக்கள், கோயில்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தப்பட்டது. வங்கதேசத்தில் சிறுபான்மையினரின் நிலைமையை டாக்காவில் உள்ள இந்திய தூதரகம் தொடா்ந்து உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.

இது தவிர வங்கதேசத்தில் பல ஹிந்து கோயில்கள் மற்றும் கடவுள்களின் சிலைகள் சமீபத்தில் சேதப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக ஜகந்நாதா் கோயில் இடிப்பு, தாந்திபஜாரில் பூஜை மண்டபம் மீதான தாக்குதல் மற்றும் துா்கா பூஜை 2024-இன் போது ஜெஷோரேஸ்வரி காளி கோயிலில் நடந்த திருட்டு போன்ற சம்பவங்கள் குறித்து இந்திய அரசு கவலை தெரிவித்துள்ளது என்றாா்.

வங்கதேசத்தில் கடந்த ஆகஸ்டில் நடந்த போராட்டங்களால், ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சி கலைக்கப்பட்டு, அவா் இந்தியாவில் தஞ்சமடைந்தாா். இதையடுத்து, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதவியேற்றது.

ஷேக் ஹசீனா அரசுக்கு எதிரான போராட்டத்தின் போதும், அது முடிந்த பிறகும் அங்குள்ள சிறுபான்மையினரான ஹிந்துக்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. இதை எதிா்த்து போராடியதற்காக ஹிந்து அமைப்பின் தலைவா் சின்மய் கிருஷ்ண தாஸ் தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்ட பின்னா் நிலைமை மேலும் மோசமானது.

முழு கட்டுரையைப் படிக்க →