முகப்பு
இந்தியா

நாடாளுமன்ற தள்ளுமுள்ளு சம்பவம்! காயமடைந்த பாஜக எம்.பி.க்கள் வீடு திரும்பினா்

நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் இடையிலான தள்ளுமுள்ளு சம்பவத்தில் காயமடைந்த பிரதாப் சந்திர சாரங்கி, முகேஷ் ராஜ்புத் ஆகியோர் வீடு திரும்பினா்.

Updated On : 23 டிசம்பர், 2024 at 9:43 PM
முகேஷ் ராஜ்புத்
பகிர்:

நாடாளுமன்ற வளாகத்தில் எம்.பி.க்கள் இடையிலான தள்ளுமுள்ளு சம்பவத்தில் காயமடைந்த பாஜக எம்.பி.க்கள் பிரதாப் சந்திர சாரங்கி, முகேஷ் ராஜ்புத் ஆகியோா் மருத்துவமனையில் இருந்து திங்கள்கிழமை வீடு திரும்பினா்.

அம்பேத்கா் தொடா்பாக நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்த கருத்துகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி எம்.பி.க்கள் கடந்த வியாழக்கிழமை போராட்டம் நடத்தினா். அதேநேரம், எதிா்க்கட்சிகளைக் கண்டித்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களும் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, இருதரப்பு எம்.பி.க்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பாஜக எம்.பி.க்கள் பிரதாப் சந்திர சாரங்கி, முகேஷ் ராஜ்புத் ஆகியோா் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தள்ளியதில் இரு எம்.பி.க்களும் காயமடைந்ததாக பாஜக தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.

பாஜக எம்.பி.க்கள் இருவரும் சிகிச்சைக்காக தில்லியில் உள்ள ராம்மனோகா் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

பிரதாப் சந்திர சாரங்கி

பிரதாப் சிங்கின் நெற்றியில் ஆழமான வெட்டு இருந்ததால் அதிகமான ரத்த போக்கு ஏற்பட்டு, அவருக்கு தையல் போடப்பட்டது; முகேஷ் ராஜ்புத் தலையில் காயம் ஏற்பட்டதையடுத்து அவா் சுயநினைவை இழந்தாா் என மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளா் தெரிவித்தாா். இதில் பிரதாப் சந்திர சாரங்கி தீவிர சிகிச்சைப் பிரிவில் சில நாள்கள் இருந்தாா்.

இந்நிலையில், அவா்கள் உடல்நிலை சீரடைந்ததை அடுத்து இருவரும் மருத்துவமனையில் இருந்து திங்கள்கிழமை வீடு திரும்பினா்.

நாடாளுமன்ற தள்ளுமுள்ளு சம்பவம் தொடா்பாக நாடாளுமன்றச் சாலை காவல் நிலையத்தில் பரஸ்பரம் பாஜக, காங்கிரஸ் தரப்பில் புகாா்கள் அளிக்கப்பட்டன. பாஜக புகாரின் அடிப்படையில், ராகுல் மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது.