புது தில்லி: முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் வியாழக்கிழமை(டிச. 26) இரவு 10 மணியளவில் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் காலமானார். அன்னாரது இறுதிச்சடங்கு சனிக்கிழமை(டிச.28) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாக்டர் மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அன்னாரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘கல்வி, நிர்வாகம் ஆகிய இரு துறைகளையும் எளிமையாகக் கையாண்ட அரிதினும் அரிதான அரசியல் தலைவர்களுள் ஒருவர் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள்.
அரசு நிர்வாகத்தில் அவர் வகித்த பல்வேறு பொறுப்புகளின்போது இந்திய பொருளாதாரத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள முக்கிய பங்களிப்பை அளித்தவர்.
நாட்டுக்கு அவர் ஆற்றிய சேவைக்காகவும், தனது எளிமை, மனிதாபிமான பண்புகளுக்காகவும், அரசியல் வாழ்க்கைக்காகவும் என்றென்றும் நினைவி வைத்து போற்றப்படுவார்.
அன்னாருடைய மறைவு நம் அனைவருக்கும் பேரிழப்பு.
பாரதத்தின் மிகச் சிறந்ததொரு புதல்வனுக்கு நான் மரியாதையுடன் எனது இரங்கலை உரித்தாக்குகிறேன்.
அன்னாருடைய குடும்பத்துக்கும் நட்புகளுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனப் பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘டாக்டர் மன்மோகன் சிங் குறித்து பேசுவது மிகுந்த உணர்சிப்பூர்வமானதொரு தருணம்’ எனக் குறிப்பிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது, ‘டாக்டர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கையும் அவரது உழைப்பும், 1991 முதல் 2014 வரையிலான காலகட்டமும் இந்திய வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய காலம்.
அவருடன் நெருக்கமாக பல ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறேன். இவ்வளவு எளிமையானதொரு மனிதரை இதுவரை கண்டதில்லை. வரலாற்று சாதனைகளுக்கு சொந்தக்காரரான அவர், அவற்றுக்காக எப்போதும் உரிமை கோரியதில்லை.
அவர் நிதியமைச்சரான பின், இந்தியாவின் களம் முற்றிலுமாக மாறியது. நிதியமைச்சராகவும் பிரதமராகவும் அவர் உருவாக்கிய கொள்கைகளால் இப்போதைய நடுத்தர வர்க்கம் என்ற வாழ்வாதாரப் பிரிவு உருவானது.
தனது பதவிக்காலம் முழுவதும் ஏழைகளுக்காக எப்போதும் சேவையற்றியவர். கோடிக்கணக்கான இந்தியர்கள் ஏழைகளே என்ற உண்மையை அவர் மறைத்து பேசியதேயில்லை. அரசின் கொள்கைகள் ஏழைகளுக்குச் சாதகமாகவே இருக்க வேண்டும் என்று நமக்கு நினைவூட்டியவர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், மதிய உணவு திட்டம் விரிவாக்கம், பிடிஎஸ் ஆகியவற்றை இதற்கான உதாரணங்களாக குறிப்பிடலாம்.
அன்னாரது சாதனைகள் இன்னும் முழுமையாக பதிவு செய்யப்படவில்லை. அரசியலில் அவர் உடல்நலத்துடன் திறம்பட ஈடுபட்டிருந்த அந்த 23 ஆண்டுகளை பின்னோக்கி திரும்பிப் பார்க்கும்போது அவரது உண்மையான பங்களிப்பை நாம் உணர்ந்துகொள்ள இயலும்’ என உருக்கமாகப் பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘இந்தியா மிகுந்த மதிப்புக்குரிய தலைவர்களுள் ஒருவரை இழந்துள்ளது. எளிமையான பின்புலத்திலிருந்து வந்த டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள், போற்றுதற்குரிய பொருளாதார நிபுணராக விளங்கியவர். நிதியமைச்சர் உள்பட அரசின் பல்வேறு பதவிகளில் பொறுப்பு வகித்தவர். பொருளாதாரக் கொள்கையில் ஆழமான தடத்தை விட்டுச் சென்றுள்ளார். மக்களின் வாழ்க்கை மேம்பட அவர் பரந்தளவிலான முயற்சிகளை எடுத்தவர்’ எனப் பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘அன்னாரது நேர்மை நம் அனைவருக்கும் எப்போதும் உத்வேகமளிக்கும். இந்த நாட்டை உண்மையாக நேசிப்பவர்களில் உயர்ந்த மனிதராக எப்போதும் திகழ்பவர். அவரது எதிர்ப்பாளர்கள் அவர் மீது தனிப்பட்ட முறையில் தாக்கி பேசினாலும் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் நாட்டுக்கு சேவையாற்றுவதில் தொடர் பங்களிப்பை அளித்தவர்.
கடைசி வரை அறிவார்ந்த தன்னம்பிக்கை மிக்க தைரியமானவாராக திகழ்ந்தவர். கல்லும் முள்ளும் நிறைந்த அரசியல் உலகத்தில் ஒரு ஜென்டில்மேன் ஆக விளங்கியவர்’ எனப் பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘ஆழ்ந்த அறிவாற்றலாலும் ஒற்றுமையுணர்வாலும் இந்தியாவை வழிநடத்தியவர் மன்மோகன் சிங் அவர்கள். அன்னாரது எளிமையும் பொருளாதாரத்தைப் பற்றிய ஆழ்ந்த புரிதலும் தேசத்துக்கு உத்வேகத்தை தந்தது.
இத்தருணத்தில் கௌருக்கும்(மன்மோகன் சிங் மனைவி) குடும்பத்துக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுடைய வழிகாட்டியை இழந்து தவிக்கிறேன். அவரைப் பார்த்து உத்வேகமடைந்த நம்மில் கோடிக்கணக்கானோர் மிகுந்த பெருமிதத்துடன் அவரை என்றும் நினைவில் வைத்துப் போற்றுவோம்’ எனப் பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘டாக்டர் மன்மோகன் சிங் அவர்களை சந்தேகத்திற்கிடமின்றி ‘அன்புக்கு உரியவராக’ வரலாறு நினைவில்கொள்ளும்!
தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு தலைவரை இந்தியா இழந்துள்ளது. ஈடு இணையில்லா ஒரு பொருளாதாரா நிபுணர்’ எனப் பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அன்னாரது பொருளாதார நடவடிக்கைகள் பல, கோடிக்கணக்கான இந்தியர்களின் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது என்றும், இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தினர் என்ற வாழ்வாதார சூழலை உருவாக்கியது என்றும், வறுமையிலிருந்து கோடிக்கணக்கானோரை மீட்டுள்ளது’ என்றும் உருக்கமாகத் தெரிவித்துள்ளார் கார்கே.
முதல்வர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மறைவால் மிகுந்த வருத்தமடைந்துள்ளேன். அன்னாரது அறிவாற்றலும், தலைமைத்துவமும் இந்தியாவின் பொருளாதார மாற்றத்தை வழிநடத்திச் சென்றது. அன்னாரது பதவிக்காலத்தில் கோடிக்கணக்கானோரின் வாழ்க்கையில் நிலையான வளர்ச்சி, சமூக மேம்பாடு, சீர்திருத்தங்களைக் கொண்டு வரப்பட்டது’ எனப் பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும், ‘தலைவர் கலைஞர் அவர்கள் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுடன் இணைந்து செயல்பட்டது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியது. அவர்கள் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த மதிப்பும், அவர்களது கூட்டணியும் மிகப் பெரும் சிறப்புத் திட்டங்களைக் கொண்டு வந்து, அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாட்டின் வளர்ச்சியை வலுப்படுத்தின. தமிழ்நாட்டின் கனவுகளை மதிப்பவராக டாக்டர் மன்மோகன் சிங் இருந்தார். தென்னக மக்களின் குரல்கள் தேசிய அளவிலான திட்டங்களில், கொள்கைகளில் எதிரொலிப்பதை அவர் உறுதிசெய்தார். நெருக்கடியான காலங்களிலும் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களும் தலைவர் கலைஞர் அவர்களும் உறுதியாக ஒன்றிணைந்து நின்று, நம்பிக்கை மற்றும் மாநில அடையாளங்களுக்கான மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட கூட்டணி அரசின் வலிமையை வெளிப்படுத்தினர்.
அவரது அமைதியான, ஆழ்ந்த சிந்தனை கொண்ட தலைமைப்பண்பானது பொதுவாழ்வில் காண்பதற்கு மிகவும் அரிதான பண்பாகும். அவர் குறைவாகப் பேசினார், ஆனால் மிகுதியாகச் சாதித்தார். அவர் வாய்ச்சொல் வீரராக அல்லாமல் தனது தீர்க்கமான செயல்களினால் பேசினார். பிரதமர் என்பதையும் தாண்டி, தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு நண்பராக அவர் விளங்கினார். நமது தேவைகளைப் புரிந்துகொண்டு, அவற்றைத் தீர்த்து வைத்த அவரது செயல்பாடு இந்தியாவின் வளர்ச்சி வரலாற்றில் தமிழ்நாடு வலிமையான பங்காற்றுவதற்குத் துணைபுரிந்தது. பரந்துபட்ட அறிவைக் கொண்டிருந்தாலும், உயர்ந்த பதவியில் இருந்தாலும் மிகவும் அடக்கத்துடன் அவர் இருந்தார்.
இதன்வழியாக அவருடன் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றவர்களிடம் ஆழ்ந்த தாக்கத்தை அவர் விட்டுச் சென்றுள்ளார். தமிழ்நாட்டு மக்களின் சார்பாகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகவும் திரு. மன்மோகன் சிங் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் காங்கிரஸ் பேரியக்கத்தைச் சேர்ந்த அனைத்துத் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் பேரறிவும், பணிவும், தொண்டும் எதிர்காலத் தலைமுறைகளுக்கு ஊக்கமூட்டித் தொடர்ந்து வழிகாட்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மறைந்துள்ளதாக வந்துள்ள செய்தி மிகுந்த கவலையை தருகிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்து, இந்தியாவின் நிதியமைச்சராகவும் பிரதமராகவும் நாட்டின் நிர்வாகத்தில் முக்கியமான பங்களிப்பை அளித்துள்ளார். அன்னாரது குடும்பத்துக்கும் ஆதரவாளர்களுக்கும் இந்த இக்கட்டான தருணத்தில் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனப் பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.
எல்.முருகன் (மத்திய இணை அமைச்சா்): முன்னாள் பிரதமரும், சிறந்த பொருளாதார ஆலோசகருமான மன்மோகன் சிங் மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது. சிறந்த கல்வித் திறனால், இந்தியப் பொருளாதார மீட்சிக்கு ஆலோசகராக விளங்கியவா். பல்வேறு அரசுப் பொறுப்புகள் வகித்ததுடன், மத்திய நிதி அமைச்சராகவும் செயல்பட்டாா். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.
எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக பொதுச் செயலா்): முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் காலமானாா் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். அவா் சிறந்த பொருளாதார நிபுணா். திறமையான நிா்வாகி மற்றும் முன்மாதிரியான அரசியல்வாதி. அவரது பங்களிப்புகள் நாட்டின் வரலாற்றில் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. அவரது மறைவு நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.
கே.அண்ணாமலை (தமிழக பாஜக தலைவா்): முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் மறைவுக்கு தமிழக பாஜக சாா்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். பொருளாதாரத்தில் வலுவான புத்திசாலித்தனம் கொண்ட ஒரு தலைவா். அவா் மத்திய நிதியமைச்சராக இருந்த காலத்தில் தாராளமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தை நோக்கி நாட்டை வழிநடத்தினாா். இந்தியாவின் தைரியமான சீா்திருத்தங்களின் தொடக்கத்துக்கு வழிவகுத்தாா். அவரது ஆன்மா எல்லாம் வல்ல இறைவனின் பாதத்தில் சாந்தி அடையட்டும்.
கு.செல்வப்பெருந்தகை (தமிழக காங்கிரஸ் தலைவா்): நாகரிகமாக, மென்மையாகப் பேசும் பொருளாதார நிபுணரான மறைந்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங், அவரது ஆட்சிக் காலத்தில் லட்சக்கணக்கான மக்களை வறுமையின் பிடியிலிருந்து மீட்டு இந்தியாவை வளா்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்றாா்.
ராமதாஸ் (பாமக நிறுவனா்): இந்தியாவின் அரசியல் வரலாற்றில் மன்மோகன் சிங்குக்கு தவிா்க்க முடியாத இடம் உண்டு. உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்திருப்பதற்கு முதன்மைக் காரணமாக இருந்தவா். பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சீா்திருத்தங்களைக் கொண்டு வந்தவா். அவரின் இழப்பு இந்தியாவுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு.
அன்புமணி (பாமக தலைவா்): உலகின் தலைசிறந்த வல்லுநா்; வயது குறைவானவா்களையும் மதிப்புடன் நடத்துபவா் மன்மோகன் சிங். வாழ்நாளில் மறக்க முடியாத தலைவா்களில் குறிப்பிடத்தக்கவா். கிராமப்புற மக்களுக்கும் அனைத்து வகையான சுகாதார வசதிகளும் கிடைக்கச் செய்தவா்.
ஜி.கே.வாசன் (தமாகா): மன்மோகன் சிங்கின் மறைவு நாட்டுக்கு மிகப்பெரிய இழப்பு. இந்திய அரசியலில் பல்வேறு பிரதமா்களின் தலைமையில் நாட்டின் பல துறைகளில் மிகச் சிறப்பாக பணியாற்றியவா்.
விஜய் (தவெக தலைவா்): முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. அவா் இந்தியாவை மகத்தான ஞானத்துடனும், நோ்மையுடனும் வழிநடத்தினாா். அவா் குறைவாகப் பேசினாா்; ஆனால் அதிகமாக செய்தாா். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.
இதேபோல, பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவா்களும், பிற அமைப்புகளின் தலைவா்களும் இரங்கலைத் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.