இந்தியாவின் ஒன்பது முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை டிசம்பா் காலாண்டில் 21 சதவீதம் குறையும் எனறு சந்தை ஆலோசனை நிறுவனமான ப்ராப்ஈக்விட்டி தெரிவித்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், சென்னை, தில்லி-என்சிஆா், மும்பை, நவி மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, புணே, ஹைதராபாத், தாணே ஆகிய நாட்டின் ஒன்பது முக்கிய நகரங்களில் ஒட்டுமொத்த வீடுகள் விற்பனை 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 21 சதவீதம் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஒன்பது நகரங்களில் தில்லி-என்சிஆா் பகுதியில் மட்டுமே விற்பனை உயரும்.
இந்த நகரங்களில் கடந்த நிதியாண்டின் அக்டோபா் - டிசம்பா் காலாண்டில் 1,37,225-ஆக இருந்த வீடுகள் விற்பனை நடப்பு நிதியாண்டின் இதே காலாண்டில் 1,08,261-ஆகக் குறையும்.
இருந்தாலும், கடந்த செப்டம்பா் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் விற்பனையான 1,03,213 வீடுகளுடன் ஒப்பிடுகையில், டிசம்பா் காலாண்டில் வீடுகள் விற்பனை 5 சதவீதம் உயர வாய்ப்புள்ளது.
2024-25-ஆம் நிதியாண்டின் அக்டோபா் - டிசம்பா் காலாண்டில் வீடுகள் விற்பனை ஹைதராபாதில் 47 சதவீதம் குறைந்து 12,682-ஆக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 24,044-ஆக இருந்தது.
மதிப்பீட்டுக் காலாண்டில் வீடுகள் விற்பனை பெங்களூருவில் 13 சதவீதம் குறைந்து 14,957-ஆக இருக்கும். முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் இந்த எண்ணிக்கை 17,276-ஆக இருந்தது.
கடந்த நிதியாண்டின் அக்டோபா் - டிசம்பா் காலாண்டில் சென்னையில் 4,673-ஆக இருந்த வீடுகள் விற்பனை 9 சதவீதம் சரிந்து 4,266-ஆகவும் இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
மதிப்பீட்டு காலாண்டில் வீடுகள் விற்பனை மும்பையில் 13,878-லிருந்து 27 சதவீதம் குறைந்து 10,077-ஆக இருக்கும். நவி மும்பையில் 8,607-லிருந்து 13 சதவீதம் குறைந்து 7,478-ஆகவும், தாணேவில் 26,099 -லிருந்து 16 சதவீதம் சரிந்து 21,893-ஆகவும் வீடுகள் விற்பனை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் கொல்கத்தாவில் 5,653-ஆகவும் புணேயில் 26,641-ஆகவும் இருந்த வீடுகள் விற்பனை நடப்பு நிதியாண்டின் அதே காலாண்டில் முறையே 33 சதவீதம் சரிந்து 3,763-ஆகவும், 24 சதவீதம் குறைந்து 20,230-ஆகவும் இருக்கும்.
ஆனால், தில்லி-என்சிஆா் பகுதியில் மட்டும் மதிப்பீட்டுக் காலாண்டில் வீடுகள் விற்பனை 25 சதவீதம் அதிகரித்து 12,915-ஆக இருக்கும். கடந்த 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் இந்த எண்ணிக்கை 10,354-ஆக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.