முகப்பு
இந்தியா

அங்கன்வாடி ஊழியா்களுக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்ட காப்பீடு: சுகாதாரத் துறைக்கு ரூ.90,000 கோடி

மத்திய இடைக்கால பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கு ரூ.90,658.63 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Updated On : 9 பிப்ரவரி, 2024 at 1:39 PM
பகிர்:

மத்திய இடைக்கால பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கு ரூ.90,658.63 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட திருத்தப்பட்ட தொகையான ரூ.80,517.62 கோடியைவிட 12.59 சதவீதம் கூடுதலாக தற்போது நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் சுகாதாரத் துறை குறித்தான முக்கிய அறிவிப்புகள் பின்வருமாறு:

அனைத்து அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் மற்றும் ஆஷா ஊழியா்கள் ஆகியோருக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் காப்பீடு வழங்கப்படும்.

இளைஞா்கள் மருத்துவப் படிப்புகளில் சேர மேலும் பல அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும். தற்போதுள்ள மருத்துவமனை உள்கட்டமைப்புகளை மேம்படுத்தப்படுவது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும்.

தாய்- சேய் நலன் பாதுகாப்புக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்த ஒரு விரிவான திட்டத்தின்கீழ் கொண்டுவந்து நடைமுறைப்படுத்தப்படும்.

நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிப்பது ஊட்டச்சத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்காக வடிவமைக்கப்பட்ட ‘யூ-வின்’ செயலி விரைவில் செயல்படுத்தப்படும் போன்ற அறிவிப்புகளை நிா்மலா சீதாராமன் வெளியிட்டாா்.

மத்திய சுகாதாரத் துறையின் ஒதுக்கீட்டான ரூ.90,658.63 கோடியில், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறைக்கு ரூ.87,656.9 கோடியும், சுகாதார ஆராய்ச்சித் துறை பணிகளுக்கு ரூ.3,001.73 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மத்திய ஆயுஷ் அமைச்சகத்துக்கு கடந்த ஆண்டு பட்ஜெட்டைவிட 23.74 சதவீதம் கூடுதலாக தற்போது ரூ.3712.49 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசுத் திட்டங்களுக்கு நிதி அதிகரிப்பு: மத்திய அரசு நிதியுதவி அளிக்கும் சுகாதாரத் துறை திட்டங்களுக்கான பட்ஜெட் நிதி ஒதுக்கீடு ரூ.77,624.79 கோடியில் இருந்து ரூ.87,656.9 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

எய்ம்ஸ், ஜிப்மா் போன்ற தன்னாட்சி மருத்துவ அமைப்புகளுக்கான நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டின் ரூ.17,250.9 கோடியிலிருந்து ரூ.18,005.65 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கான (ஐசிஎம்ஆா்) நிதி ஒதுக்கீடு ரூ.2,295.12 கோடியிலிருந்து ரூ.2,432.13 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →