சத்தீஸ்கர்: பாஜக சார்பில் தேவேந்திர பிரதாப் வேட்புமனு தாக்கல்!
மாநிலங்களவை உறுப்பினர் சரோஜ் பாண்டேவுக்குப் பதிலாக பிரதாப் சிங் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சத்தீஸ்கரில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக தேவேந்திர பிரதாப் சிங் வேட்புமனு தாக்கல் செய்தார்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் இதற்கு முன்னதாக உத்தர பிரதேசம், பிகார், ஆந்திரம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் காலியாகவுள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில் இதற்கான தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, ஆளும் கட்சி மாநிலத்தின் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினர் சரோஜ் பாண்டேவுக்குப் பதிலாக பிரதாப் சிங் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் பேரவை செயலாளரும், தேர்தல் அதிகாரியுமான தினேஷ் சர்மாவிடம் தனது ஆவணங்களை சமர்ப்பித்து வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
சத்தீஸ்கரை சேர்ந்த ஐந்து மாநிலங்களவை உறுப்பினர்களில் பாண்டேவின் பதவிக்காலம் முடிவடைகிறது. மற்ற நான்கு எம்.பி.க்களான கேடிஎஸ் துளசி, பூலோதேவி நேதம், ரஞ்சீத் ராஜன் மற்றும் ராஜீவ் சுக்லா ஆகியோர் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள்.
90 உறுப்பினர்களைக் கொண்ட சத்தீஸ்கர் சட்டப்பேரவையில் ஆளும் பாஜகவுக்கு 54 எம்எல்ஏக்களும், காங்கிரஸுக்கு 35 எம்எல்ஏக்களும் உள்ளனர். கோண்ட்வானா காந்தந்த்ரா கட்சிக்கு ஒரு உறுப்பினர் உள்ளார்.