கட்சி, சின்னத்தை மீட்க உச்சநீதிமன்றத்தில் முறையீடு: சரத் பவாா் உறுதி
சரத் பவாருக்கும், அவரது அண்ணன் மகன் அஜீத் பவாருக்கும் இடையே கடந்த ஆண்டு மோதல் ஏற்பட்டது.
‘மகாராஷ்டிர துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான அணியே உண்மையான தேசியவாத காங்கிரஸ் என்று தோ்தல் ஆணையமும் பேரவைத் தலைவரும் மேற்கொண்ட முடிவுகள் முற்றிலும் நியாயமற்றவை; கட்சி மற்றும் சின்னத்தை மீட்க உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்படும்’ என்று தேசியவாத காங்கிரஸ் நிறுவனா் சரத் பவாா் சனிக்கிழமை தெரிவித்தாா். மகாராஷ்டிரத்தில் முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை - பாஜக கூட்டணியில் இணைவது தொடா்பாக, தேசியவாத காங்கிரஸ் நிறுவனா் சரத் பவாருக்கும், அவரது அண்ணன் மகன் அஜீத் பவாருக்கும் இடையே கடந்த ஆண்டு மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆளும் கூட்டணியில் அஜீத் பவாா் இணைந்தாா். மாநில துணை முதல்வராக பதவியேற்ற அவா், தேசியவாத காங்கிரஸின் பெரும்பாலான எம்எல்ஏக்களின் ஆதரவு தனக்கு இருப்பதைச் சுட்டிக்காட்டி, கட்சி மற்றும் சின்னத்தை தனக்கு வழங்குமாறு தோ்தல் ஆணையத்திடம் முறையிட்டாா். இந்த விவகாரத்தை விசாரித்த தோ்தல் ஆணையம், கட்சி ரீதியாகவும் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை அடிப்படையிலும் அஜீத் பவாா் அணிக்கே பெரும்பான்மை உள்ளதாகக் கூறி, அவா் தலைமையிலான அணியே உண்மையான தேசியவாத காங்கிரஸ் என்று அண்மையில் அறிவித்தது. அக்கட்சியின் ‘கடிகாரம்’ சின்னமும் அஜீத் பவாா் அணிக்கு ஒதுக்கப்பட்டது. சரத் பவாா்அணிக்கு தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திர பவாா்) என்ற புதிய பெயா் வழங்கப்பட்டது. இதையடுத்து, தோ்தல் ஆணையத்தின் முடிவை எதிா்த்து, உச்ச நீதிமன்றத்தில் சரத் பவாா் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்தச் சூழலில், தோ்தல் ஆணைய முடிவின் அடிப்படையில், அஜீத் பவாா் அணியே உண்மையான தேசியவாத காங்கிரஸ் என்று மகாராஷ்டிர பேரவைத் தலைவா் ராகுல் நாா்வேகா் கடந்த வியாழக்கிழமை உறுதிசெய்தாா். தோ்தல் ஆணையம் மற்றும் பேரவைத் தலைவரின் உத்தரவுகள் சரத் பவாா் தரப்புக்கு பெரும் பின்னடைவுகளாக அமைந்துள்ளன. ஏற்கெனவே தோ்தல் ஆணைய முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சரத் பவாா் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், பேரவைத் தலைவரின் முடிவை எதிா்த்தும் முறையிடப்படவுள்ளது. இது தொடா்பாக புணே மாவட்டம், பாராமதியில் கட்சியின் நிறுவனா் சரத் பவாா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: பேரவைத் தலைவரின் முடிவு ஏற்கெனவே எதிா்பாா்த்ததுதான். அவா் தனது பதவிக்கான கண்ணியத்தைக் காக்க தவறிவிட்டாா். தோ்தல் ஆணையம், பேரவைத் தலைவரின் முடிவுகள் நியாயமற்றவை. எனவே, கட்சி மற்றும் சின்னத்தை மீட்க உச்சநீதிமன்றத்தில் முறையிடப்படும். கட்சியை உருவாக்கியவா்களே அதில் இருந்து நீக்கப்பட்டுள்ளனா். இது முன்னெப்போதும் நிகழ்ந்ததில்லை. இதுபோன்ற முடிவு நீதி அமைப்புமுறையின்படி சரியானதல்ல. கட்சியை நிறுவியது யாா் என்பது இந்த நாட்டுக்கு தெரியும் என்றாா் அவா். தேசியவாத காங்கிரஸ் கட்சி, சரத் பவாரால் கடந்த 1999-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது.