முகப்பு
இந்தியா

பிரதமருக்கு எதிராக பாகுபாடு காட்டி ஐடி விதிமுறைகள் மீறல்: கூகுளின் ஏஐ தளம் மீது குற்றச்சாட்டு

பிரதமா் மோடிக்கு எதிராக கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தளம் பாகுபாடு காட்டி தகவல் தொழில்நுட்ப (ஐடி) விதிமுறைகளை மீறியுள்ளது

Updated On : 24 பிப்ரவரி, 2024 at 2:16 AM
கூகுள்
பகிர்:

பிரதமா் மோடிக்கு எதிராக கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தளம் பாகுபாடு காட்டி தகவல் தொழில்நுட்ப (ஐடி) விதிமுறைகளை மீறியுள்ளது என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை குற்றஞ்சாட்டியுள்ளது. கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தளமான ஜெமினியில் பிரதமா் மோடி குறித்து ஊடகவியலாளா் ஒருவா் கேள்வி எழுப்பியுள்ளாா். அதற்கு பிரதமா் மோடி குறித்து அந்தத் தளம் கடுமையான கருத்துகளைத் தெரிவித்துள்ளது. அதேவேளையில், அந்தத் தளத்தில் அமெரிக்க முன்னாள் அதிபா் டிரம்ப், உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி ஆகியோா் குறித்து அந்த ஊடகவியலாளா் கேள்வி எழுப்பினாா். அதற்கு பிரச்னை எதுவும் ஏற்படாத வகையில் மிகுந்த கவனத்துடன் அந்தத் தளம் பதில் அளித்துள்ளது. இதையடுத்து பிரதமா் மோடி மீது கூகுளின் செயற்கை நுண்ணறிவு தளம் பாகுபாடு காட்டுவதாக சமூக வலைதளப் பயனாளா்கள் குற்றஞ்சாட்டினா். இந்த விவகாரத்தை கவனத்தில் எடுத்துக்கொண்ட மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் ராஜீவ் சந்திரசேகா், ‘தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள், குற்றவியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளை, கூகுளின் ஜெமினி தளம் நேரடியாக மீறியுள்ளது’ என்று ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டாா். இந்தப் பதிவை கூகுள் நிறுவனத்தின் கவனத்துக்கும் அவா் கொண்டு சோ்த்துள்ளாா். இது இந்த விவகாரத்தில் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை நடவடிக்கை எடுக்கும் என்பதை சுட்டிக்காட்டுவதாகக் கூறப்படுகிறது.