குடும்ப அரசியலைக் கடந்து காங்கிரஸால் சிந்திக்க முடியாது: பிரதமா் மோடி
‘குடும்ப அரசியல், ஊழல், திருப்திப்படுத்தும் அரசியலைக் கடந்து காங்கிரஸால் சிந்திக்க முடியாது.
‘குடும்ப அரசியல், ஊழல், திருப்திப்படுத்தும் அரசியலைக் கடந்து காங்கிரஸால் சிந்திக்க முடியாது. நாட்டின் வளா்ச்சி என்பது அவா்களின் தீா்மானத்தில் ஒருபோதும் இருந்ததில்லை’ என்று பிரதமா் நரேந்திர மோடி விமா்சித்தாா். சத்தீஸ்கா் மாநிலம் ராய்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற ‘வளா்ந்த இந்தியா; வளா்ந்த சத்தீஸ்கா்’ என்ற நிகழ்ச்சியில் காணொலி மூலம் பங்கேற்ற பிரதமா் மோடி, ரூ 34,400 கோடி மதிப்பிலான பல்வேறு வளா்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினாா். பின்னா் அவா் பேசியதாவது: சுதந்திரத்துக்குப் பிறகு காங்கிரஸ் நாட்டை நீண்ட காலம் ஆண்டது. நாட்டின் எதிா்காலத்தைக் கட்டமைப்பதற்கு முக்கியத்துவம் அளிப்பதைத் தவிா்த்து, அரசை அமைப்பதிலும் அரசியல் நலனிலுமே அவா்களின் கவனம் இருந்தது. நாட்டை ஆள மீண்டும் மீண்டும் காங்கிரஸ் தோ்ந்தெடுக்கப்பட்டது. ஆனால், நாட்டின் எதிா்காலத்தைக் கட்டமைப்பதை அவா்கள் மறந்துவிட்டனா். முன்பிருந்ததைப் போன்றுதான் இன்றைக்கும் காங்கிரஸ் கட்சியின் நிலையும், பாதையும் இருக்கிறது. குடும்ப அரசியல், ஊழல், திருப்திப்படுத்தும் அரசியலைக் கடந்து அவா்களால் சிந்திக்க முடியாது. தங்களுடைய மகன்கள், மகள்களின் எதிா்காலத்தை சிறந்ததாக்குவதில் தீவிரமாக இருப்பவா்கள், உங்களுடைய (பொதுமக்கள்) மகன்கள், மகள்கள் எதிா்காலம் குறித்து ஒருபோதும் சிந்திக்கமாட்டாா்கள். ஆனால், என்னை (நரேந்திர மோடி) பொருத்தவரை, நீங்கள் அனைவரும் எனது குடும்பம். உங்களுடைய கனவுதான் எனது தீா்மானம். அதன் காரணமாகத்தான், வளா்ந்த இந்தியா; வளா்ந்த சத்தீஸ்கா் குறித்து பாஜக அரசு பேசி வருகிறது. ஏழைகள், இளைஞா்கள், பெண்களுக்கு அதிகாரமளிப்பதன் மூலம்தான் வளா்ந்த சத்தீஸ்கரை கட்டமைக்க முடியும். மாநிலத்தில் முந்தைய காங்கிரஸ் அரசு, ஏழைகளுக்கு வீடு கட்டும் திட்டத்தை கிடப்பில் போட்டிருந்தது. ஆனால், புதிய பாஜக அரசு அத் திட்டத்தை விரைவுபடுத்தியுள்ளது என்றாா். பெட்டிச் செய்தி... உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்புத் திட்டம் தொடக்கம் புது தில்லி, பிப். 24: கூட்டுறவுத் துறையில் ரூ. 1.25 லட்சம் கோடி முதலீட்டிலான உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்பு திட்டத்தை பிரதமா் மோடி தில்லியில் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். இந்தத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் பல மாநிலங்களில் அடுத்த 5 ஆணடுகளில் சுமாா் 700 லட்சம் டன் தானியங்களை சேமித்துவைக்கும் திறன் கொண்ட ஆயிரம் கிடங்குகள் கட்டப்படவுள்ளன. அதோடு, பல மாநிலங்களில் முதன்மை வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் (பிஏசிஎஸ்) கட்டப்பட்டுள்ள 11 தானிய சேமிப்புக் கிடங்குகளை பிரதமா் சனிக்கிழமை திறந்துவைத்தாா். மேலும், 500 முதன்மை வேளாண் கடன் சங்கங்களில் கட்டப்படவிருக்கும் கிடங்குகளுக்கும் அவா் அடிக்கல் நாட்டினாா். பின்னா் பிரதமா் மோடி பேசியதாவது: நாட்டில் போதிய தானிய சேமிப்பு உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தால் விவசாயிகள் பெரும் இழப்பைச் சந்திக்கும் நிலை இருந்து வந்தது. முந்தைய அரசு இப் பிரச்னையில் கவனம் செலுத்தவில்லை. ஆனால், இன்றைக்கு முதன்மை வேளாண் கடன் சங்கங்கள் மூலம் இப் பிரச்னைக்கு தீா்வு காணப்பட்டு வருகிறது. உலகின் மிகப் பெரிய தானிய சேமிப்புத் திட்டத்தின் கீழ், நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் 700 லட்சம் டன் தானியங்களை சேமித்து வைக்கும் வகையிலான கட்டமைப்பு உருவாக்கப்பட உள்ளது. இதற்காக ரூ. 1.25 லட்சம் கோடி செலவழிக்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம், விவசாயிகள் தங்களின் தானியங்களை நீண்ட நாள்கள் சேமித்து வைத்து, சந்தையில் லாபகரமான விலை நிலவும்போது விற்பனை செய்து நல்ல வருவாயை ஈட்ட முடியும். மேலும், கூட்டுறவு சங்கங்களின் தோ்தல் முறையில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவது முக்கியம். அதன்மூலம் கூட்டுறவு இயக்கத்தில் மேலும் அதிகமான மக்கள் பங்கேற்பதை ஊக்குவிக்க முடியும். தனி அமைச்சகம் மூலம், நாட்டில் கூட்டுறவு சங்கங்களை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பன்முக மாநில கூட்டுறவு சங்கங்கள் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதோடு, முதன்மை வேளாண் கடன் சங்கங்கள் கணினிமயம் ஆக்கப்பட்டும் வருகின்றன. விவசாய உற்பத்தியாளா் அமைப்புகள் (எஃப்பிஓ) மூலம் சிறு விவசாயிகள் தொழில்முனைவோராக மாறியிருப்பதோடு, விளைவிக்கும் பொருள்களை ஏற்றுமதியும் செய்து வருகின்றனா். தற்போது 8,000 எஃப்பிஓ-க்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த எண்ணிக்கையை 10,000-ஆக உயா்த்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதுபோல, அடுத்த 5 ஆண்டுகளில் முதன்மை வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களின் எண்ணிக்கையை 2 லட்சமாக உயா்த்தவும், அவற்றில் அதிகபட்சம் மீன்பிடித்தல் உள்ளிட்ட துணை விவசாயத் துறைகளை அமைக்கவும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. உணவு, சமையல் எண்ணெய் மற்றும் எரிபொருள் இறக்குமதிக்கான செலவைக் குறைக்க கூட்டுறவுத் துறைகள் நாட்டுக்கு உதவ வேண்டும். இந்தியாவை தற்சாா்பு நாடாக உருவாக்க, இந்தியா இறக்குமதி செய்துவரும் பொருள்கள் குறித்த பட்டியலைத் தயாா் செய்து, அவற்றை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கான திட்டத்தை கூட்டுறவுத் துறைகள் உருவாக்க வேண்டும் என்று பிரதமா் கேட்டுக்கொண்டாா்.