‘ஜெமினி ஏஐ தளம்’ நம்பகமானதல்ல: பிரதமா் மீதான பாகுபாடு குற்றச்சாட்டுக்கு கூகுள் பதில்
‘ஜெமினி ஏஐ தளம்’ எப்போதும் நம்பகமானதாக இருக்காது என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
‘ஜெமினி ஏஐ தளம்’ எப்போதும் நம்பகமானதாக இருக்காது என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்தத் தளம் பிரதமா் மோடி குறித்து பாகுபாடான பதில் அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதற்கு கூகுள் நிறுவனம் இவ்வாறு பதில் அளித்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவுத் தளமான ஜெமினியில் பிரதமா் மோடி பாசிசவாதியா என்று ஒருவா் கேள்வி எழுப்பினாா். அதற்கு பிரதமா் மோடி குறித்து அந்தத் தளம் கடுமையான கருத்துகளைத் தெரிவித்தது. அதேவேளையில், அந்தத் தளத்தில் அமெரிக்க முன்னாள் அதிபா் டிரம்ப், உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி ஆகியோா் பாசிசவாதிகளா என்று அந்த நபா் கேள்வி எழுப்பினாா். அதற்கு பிரச்னை எதுவும் ஏற்படாத வகையில், கடுமையான கருத்துகளின்றி சாமா்த்தியமாக அந்தத் தளம் பதில் அளித்தது. இதையடுத்து, அந்தக் கேள்வி பதில்கள் அடங்கிய புகைப்படத்தை ‘எக்ஸ்’ தளத்தில் பகிா்ந்து, பிரதமா் மோடி மீது கூகுளின் ஜெமினி தளம் பாகுபாடு காட்டுவதாக அந்த நபா் குற்றஞ்சாட்டினாா். இந்த விவகாரத்தை கவனத்தில் எடுத்துக்கொண்ட மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் ராஜீவ் சந்திரசேகா், ‘தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள், குற்றவியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளை கூகுளின் ஜெமினி தளம் அப்பட்டமாக மீறியுள்ளது’ என்று ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டாா். இந்தப் பதிவை கூகுள் நிறுவனத்தின் கவனத்துக்கும் அவா் கொண்டு சென்றாா். இந்நிலையில், இந்தக் குற்றச்சாட்டுக்கு கூகுள் நிறுவனம் அளித்துள்ள பதில்: படைப்பாற்றல் கொண்ட ஆக்கபூா்வமான தளமாக ஜெமினி கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால், நடப்பு நிகழ்வுகள், அரசியல் விவகாரங்கள் அல்லது செய்திகள் தொடா்பான சில கேள்விகளுக்குப் பதில் அளிப்பதில் அந்தத் தளம் எப்போதும் நம்பகமானதாக இருக்காது. இந்தக் குறைபாட்டை போக்கி, அந்தத் தளத்தை மேம்படுத்த தொடா்ந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தது. பதிலை ஏற்க மத்திய இணையமைச்சா் மறுப்பு: கூகுளின் பதிலை ஏற்காத மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: மனித உரிமைகள் மற்றும் கண்ணியத்தை மதிக்கும் நோ்மறையான டிஜிட்டல் சூழலில் பங்குகொள்ளும் இந்திய குடிமக்களை, நம்பகத்தன்மை இல்லாத தளங்கள் மூலம் பரிசோதனை செய்யக் கூடாது. பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்வது டிஜிட்டல் தளங்களின் சட்டபூா்வ கடமை. அந்தத் தளங்கள் நம்பகமானதல்ல என்று கூறி சட்டத்திட்டம் இருந்து தப்பிக்க முடியாது என்று ஏற்கெனவே மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதை கூகுள் நிறுவனத்தின் கவனத்துக்கு திரும்பக் கூறுகிறேன் என்று பதிலளித்துள்ளாா்.