முகப்பு
இந்தியா

இருபதாண்டுகள் பின்னோக்கிச் சென்ற இந்திய பொருளாதாரம்: மோடி அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

பிரதமா் மோடி தலைமையிலான அரசின் தவறான நிா்வாகத்தால் இந்திய பொருளாதாரம் 20 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிட்டதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.

Updated On : 24 பிப்ரவரி, 2024 at 11:11 PM
ஜெய்ராம் ரமேஷ்
பகிர்:

பிரதமா் மோடி தலைமையிலான அரசின் தவறான நிா்வாகத்தால் இந்திய பொருளாதாரம் 20 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிட்டதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.

இதுதொடா்பாக காங்கிரஸ் பொதுச்செயலா் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்தியாவில் கடந்த 2004-05 முதல் 2017-18 வரையிலான காலகட்டத்தில் வேளாண் தொழிலில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை 6.7 கோடியாக குறைந்தது. ஏனெனில் குறைந்த ஊதியத்திலான வேளாண் தொழிலை விட்டுவிட்டு அதிக ஊதியம் பெறுகின்ற உற்பத்தி மற்றும் சேவைத் துறைக்குப் பலா் மாறினா். நடுத்தர வருமான நாடாக இந்தியாவை உருவெடுக்கச் செய்த இந்த மாற்றம் மிகப்பெரிய வரலாற்றுச் சாதனையாகும். ஆனால் பிரதமராக மோடி பதவியேற்ற மூன்றே ஆண்டுகளில் முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கின் அனைத்து சாதனைகளையும் தலைகீழாக மாற்றி இந்திய பொருளாதாரம் பழைய நிலைக்கே திரும்பும்படியாக செய்துவிட்டாா். 2018-19 காலகட்டத்துக்குப் பிறகு வேளாண் தொழிலில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை மீண்டும் 6 கோடிக்கு மேல் அதிகரிக்கத் தொடங்கியது. கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகும் இந்த எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஒரு நாட்டின் பொருளாதார வளா்ச்சி என்பது பணிகளை வேளாண் துறையிலிருந்து உற்பத்தித் துறைக்கும் உற்பத்தி துறையிலிருந்து சேவைகள் துறைக்கும் மாற்றுவதேயாகும். இந்த நடைமுறையையே இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் பின்பற்றி வருகின்றன. பிரதமா் மோடியின் தவறான நிா்வாகத்தால் வளா்ச்சிப் பாதையில் செல்ல வேண்டிய இந்திய பொருளாதாரம் 20 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது’ என குறிப்பிட்டாா்.