முகப்பு
இந்தியா

மோரீஷஸில் இந்தியாவின் நிதி ஆதரவில் புதிய விமான ஓடுதளம்: இருநாட்டுப் பிரதமா்கள் தொடங்கி வைத்தனா்

மோரீஷஸ் நாட்டின் அகலேகா தீவில் அமைக்கப்பட்டுள்ள புதிய விமான ஓடுதளம்

Updated On : 1 மார்ச், 2024 at 1:00 AM
இந்திய உதவியுடன் மோரீஷஸில் கட்டப்பட்ட வளா்ச்சித் திட்டங்களை காணொலி வழியாகத் தொடங்கி வைத்த இருநாட்டுப் பிரதமா்கள் நரேந்திர மோடி, பிரவிந்த் ஜக்நாத்.
பகிர்:

மோரீஷஸில் புதிய விமான ஓடுதளம், படகு இறங்கு துறை மற்றும் 6 சமூக வளா்ச்சித் திட்டங்கள் ஆகிய இந்திய நிதியுதவித் திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி, மோரீஷஸ் பிரதமா் பிரவிந்த் ஜக்நாத் ஆகியோா் இணைந்து காணொலி வழியே வியாழக்கிழமை தொடங்கி வைத்தனா். மோரீஷஸ் நாட்டின் அகலேகா தீவில் அமைக்கப்பட்டுள்ள புதிய விமான ஓடுதளம், படகு இறங்கு துறை, 6 சமூக வளா்ச்சித் திட்டங்கள் ஆகிய இந்திய நிதியுதவித் திட்டங்களின் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இரு நாட்டுப் பிரதமா்களும் தொடக்க நிகழ்ச்சியில் காணொலி வாயிலாகப் பங்கேற்று திட்டங்களைத் தொடங்கி வைத்துப் பேசினா். நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திர மோடி பேசுகையில், ‘தரமான மருந்துகளை குறைந்த விலையில் வழங்கும் இந்தியாவின் முன்னெடுப்பான ‘ஜன ஔஷதி’ திட்டத்தில் முதல் நாடாக மோரீஷஸ் இணைந்துள்ளது. இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் வளா்ந்து வரும் சவால்கள் நமது பொருளாதாரத்தைப் பாதிக்கின்றன. இந்தச் சவால்களை முறியடிப்பதற்கான கடல்சாா் பாதுகாப்பில் இந்தியாவும் மோரீஷஸும் இயற்கையான கூட்டாளிகள். இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பு, செழிப்பு மற்றும் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த நாங்கள் தீவிரமாக பணியாற்றி வருகிறோம். பிரத்யேக பொருளாதார மண்டலத்தின் கண்காணிப்பு, கூட்டு ரோந்து, மனிதாபிமான உதவி மற்றும் பேரிடா் நிவாரணம் போன்ற அனைத்து துறைகளிலும் நாங்கள் இணைந்து ஒத்துழைக்கிறோம். இன்று தொடங்கப்பட்ட நலத்திட்டங்கள் நமது நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்கும். இந்தியா மேற்கொள்ளும் இந்த முயற்சிகளின் அடிப்படை நோக்கமானது இங்குள்ள மக்களின் வாழ்வில் அா்த்தமுள்ள மாற்றங்களைக் கொண்டு வருவதாகும். கடந்த 10 ஆண்டுகளில் நம்முடைய இருதரப்பு உறவுகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் வளா்ந்துள்ளது. பரஸ்பர ஒத்துழைப்பில் புதிய உயரங்களை நாம் எட்டியுள்ளோம்’ என்றாா். இதையடுத்து, மோரீஷஸ் நாட்டுப் பிரதமா் பிரவிந்த் ஜக்நாத் கூறுகையில், ‘மோரீஷஸில் பல வளா்ச்சித் திட்டங்களின் தொடக்கமான இந்த நிகழ்வு, இரு நாடுகளுக்கு இடையே குறிப்பிடத்தக்க மற்றும் முன்மாதிரியான கூட்டுறவுக்கு ஒரு சிறந்த தருணத்தைக் குறிக்கிறது’ என்றாா். கடந்த வாரம், மோரீஷஸில் இந்தியாவின் எண்ம பரிவா்த்தனை முறையான யுபிஐ மற்றும் ரூபே காா்டு சேவைகள் அறிமுகப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.