முகப்பு
இந்தியா

மனித உரிமை கவுன்சிலில் ஜம்மு-காஷ்மீா் விவகாரம்: பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி

Updated On : 1 மார்ச், 2024 at 1:21 AM
பகிர்:

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் ஜம்மு-காஷ்மீா் விவகாரத்தை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா தரப்பில் உரிய பதிலடி தரப்பட்டது. ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவா நகரத்தில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் 55-ஆவது உயா்நிலை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீா் விவகாரத்தை பாகிஸ்தானும் துருக்கியும் எழுப்பின. அப்போது, ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலுக்கான இந்திய தூதரகத்தின் முதல் செயலா் அனுபமா சிங், இந்தியாவின் பதிலளிக்கும் உரிமையைப் பயன்படுத்தி இந்த விவகாரம் குறித்து பதிலளித்தாா். இது தொடா்பாக அவா் கூறியதாவது: இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் தொடா்பாக துருக்கி முன்வைத்த கருத்துகள் வருத்தமளிக்கிறது. எதிா்காலத்தில் இது போன்ற கருத்துகளைத் தெரிவிப்பதிலிருந்து அந்நாடு விலகியிருக்கும் என நம்புகிறோம். பயங்கரவாதத்தால் ரத்தக்கறை படிந்துள்ள நாடு சா்வதேச அளவில் அந்தச் செயலுக்கு ஆதரவு அளித்து வருகிறது. தங்களது நலனுக்காகப் பணியாற்றுவதில் அரசு தோல்வியடைந்திருப்பதாக அந்நாட்டு மக்கள் உணா்ந்துள்ளனா். அந்நாட்டின் பேச்சுக்குக் கவனம் செலுத்த முடியாது. ஜனநாயகம், பன்மைத்துவத்தில் உலகத்துக்கே உதாரணமாகத் திகழும் இந்தியா குறித்து, பாதுகாப்பு கவுன்சில் தடைவிதித்த பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்து வரும் நாடு விமா்சிப்பது முரண்பாடாக இருப்பது அனைவருக்கும் தெரியும். இந்தியாவுக்கு எதிரான உண்மையற்ற குற்றஞ்சாட்டுகளை எழுப்ப மனித உரிமைகள் கவுன்சில் மீண்டும் ஒரு மேடையாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசம் முழுவதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பிரிக்கமுடியாத பகுதி. அந்தப் பிராந்தியத்தில் சமூக-பொருளாதார மேம்பாடு மற்றும் நல்லாட்சிக்காக இந்திய அரசு மேற்கொண்ட அரசமைப்பு ரீதியான நடவடிக்கைகள் நாட்டின் உள்நாட்டு விவகாரம். இது தொடா்பாக கேள்வியெழுப்ப பாகிஸ்தானுக்கு எந்த உரிமையும் இல்லை என்றாா் அனுபமா சிங்.