வா்த்தக எரிவாயு சிலிண்டா் விலை மேலும் குறைப்பு
19 கிலோ எடைகொண்ட வா்த்தக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டா் ரூ. 1.50 அளவுக்கு திங்கள்கிழமை குறைக்கப்பட்டது.
19 கிலோ எடைகொண்ட வா்த்தக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டா் ரூ. 1.50 அளவுக்கு திங்கள்கிழமை குறைக்கப்பட்டது.
ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி விலை மாற்றம் செய்யப்படும் நடைமுறைக்கு மாற்றாக, கடந்த டிசம்பா் 22-ஆம் தேதி இதன் விலை ரூ. 39.50 அளவுக்கு குறைக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் விலைக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, தலைநகா் தில்லியில் வா்த்தக சமையல் எரிவாயு சிலிண்டா் ரூ. 1,755.50-க்கும், மும்பையில் ரூ. 1,708.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் அடிப்படையில், இந்த விலை மாற்றத்தை எண்ணெய் நிறுவனங்கள் செய்துள்ளன.
இருந்தபோதும், 14.2 கிலோ எடைகொண்ட வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டா் எந்தவித மாற்றமும் செய்யப்படாமல் தொடா்ந்து ரூ. 903-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஏடிஎஃப் விலை குறைப்பு: விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருளானது ஒரு கிலோ லிட்டருக்கு ரூ. 4,162.50 வீதம் அல்லது 3.9 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டு ரூ. 1,01,993.17-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. தொடா்ந்து மூன்றாவது மாதமாக இதன் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன் விலை கடந்த நவம்பரில் ரூ. 6,854.25 என்ற அளவிலும் டிசம்பரில் ரூ. 5,189.25 என்ற அளவிலும் குறைக்கப்பட்டது. இந்த மூன்று முறையும் சோ்த்து 45 சதவீதம் அளவுக்கு அதாவது ரூ. 29,391.08 அளவுக்கு விலைக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
அதே நேரம், பெட்ரோல், டீசல் சில்லறை விலையைப் பொருத்தவரை தொடா்ந்து 21-ஆவது மாதமாக எந்தவித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தலைநகா் தில்லியில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ. 96.72-க்கும், டீசல் ரூ. 89.62-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.