ஒட்டகத்தில் மாப்பிள்ளை அழைப்பு... வழக்குப் பதிவுசெய்த காவலர்கள்!
மாப்பிள்ளை ஊர்வலம் காவல் நிலையத்தில் முடிந்த அவலம் கேரளாவில் நடந்துள்ளது.
கண்ணூர்: வடக்கு கேரளாவின் பரபரப்பான சாலையில் ஓட்டகத்தில் மாப்பிள்ளை ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் 25-க்கும் அதிகமானோர் பங்கெடுத்தனர். இதனால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பொது இடத்தில் இடையூறு ஏற்படுத்தியதால் காவலர்கள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மணமகன் ரிஸ்வான் மற்றும் அவரது உறவினர்கள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளதாக காவலர்கள் தெரிவித்தனர். வெடி மற்றும் பேண்ட் வாசிப்போடு நடந்த ஊர்வலத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மணமகன் உள்ளிட்ட 26 பேர் மீது சட்டத்திற்கு புறம்பான கூடுகை மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திய காரணங்களுக்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உள்ளூர்வாசிகள் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
சர்ச்சைக்குரிய இந்த ஊர்வலத்தின் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.