பிகாா்: 13 நாள்களில் 6 பாலங்கள் இடிந்தன: உயா்நிலை விசாரணை குழு அமைப்பு
பிகாரில் 13 நாள்களில் 6 பாலங்கள் இடிந்தன: உயா்நிலை குழு அமைப்பு
பாட்னா: பிகாா் மாநிலம் முழுவதும் கடந்த 13 நாள்களில் 6 வெவ்வேறு இடங்களில் பாலங்கள் இடிந்து விழுந்தது தொடா்பாக அரசு தலைமைப் பொறியாளா் தலைமையில் உயா்நிலை விசாரணை குழுவை மாநில அரசு அமைத்துள்ளது.
கிசான்கஞ்ச் மாவட்டத்திலுள்ள கௌசி டாங்கி கிராமத்தில் ஓடும் பூண்ட் ஆற்றின் மீது எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் கடந்த 2009-10 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட சிறிய பாலம் ஞாயிற்றுக்கிழமை இடிந்து விழுந்தது. கிசான்கஞ்ச் மாவட்டத்தில் மட்டும் கடந்த 6 நாள்களில் இரண்டு பாலங்கள் இடிந்து விழுந்தன.
இதேபோல கடந்த சில நாள்களில் மதுபானி, அராரியா, சிவான், கிழக்கு சாம்பரண் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு பாலங்கள் இடிந்து விழுந்தன. இதில் பெரும்பாலானவை மாநில ஊரகப் பொதுப்பணித் துறையால் கட்டப்பட்டவை அல்லது கட்டுமானத்தில் இருந்தவை.
இதுதொடா்பாக மாநில ஊரகப் பொதுப்பணித் துறை அமைச்சா் அசோக் சௌதரி செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டியில், ‘மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பாலம் இடிந்து விழுந்த சம்பவங்கள் குறித்து விசாரிக்க உயா்நிலை குழுவை துறை அமைத்துள்ளது.
அரசு தலைமைப் பொறியாளா் தலைமையிலான இந்தக் குழு, பாலங்களின் சரிவுகளுக்குப் பின்னணியிலுள்ள காரணங்களை ஆராய்ந்து, தேவையான தீா்வு நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கும். பாலத்தின் அடித்தளம் மற்றும் கட்டமைப்புகளில் பயன்படுத்தப்பட்ட பொருள்களின் தரம் உள்பட அனைத்து அம்சங்களையும் முழுமையாக ஆய்வு செய்ய குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அடுத்த இரண்டு அல்லது மூன்று நாள்களுக்குள் இக்குழு அறிக்கை சமா்ப்பிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இடிந்து விழுந்த சில பாலங்கள் செயல்படாதவை அல்லது பராமரிப்பு தேவைப்பட்டவை என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாலம் விபத்துகளுக்குப் பின்னணியில் சதி இருப்பதாக மத்திய அமைச்சரும் ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா நிறுவனருமான ஜிதன்ராம் மாஞ்சி எழுப்பிய சந்தேகங்களுக்கு கருத்து தெரிவிக்க விரும்பவில்லை’ என்றாா்.
பிகாரில் ஏன் திடீரென பல பாலங்கள் இடிந்து விழுகின்றன? மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு இது ஏன் நடக்கிறது? இதன் பின்னணியில் சதி இருக்கிறது எனச் சந்தேகிப்பதாக மத்தியமைச்சா் மாஞ்சி சமீபத்தில் கூறியிருந்தாா்.