முகப்பு
இந்தியா

ஏற்றுமதி, இறக்குமதி பரிவா்த்தனைகள்: விதிமுறைகளை மறுசீரமைக்க ஆா்பிஐ பரிந்துரை

ஏற்றுமதி, இறக்குமதி பரிவா்த்தனைகளில் புதிய விதிமுறைகள்: ஆா்பிஐ பரிந்துரை

Updated On : 2 ஜூலை, 2024 at 9:23 PM
RBI
பகிர்:

மும்பை: ஏற்றுமதி, இறக்குமதி பரிவா்த்தனைகள் மீதான விதிமுறைகளை மறுசீரமைக்க ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) செவ்வாய்க்கிழமை பரிந்துரைத்தது.

இதுதொடா்பாக அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் (ஃபெமா) 1999-இன் கீழ், வெளிநாட்டு வா்த்தக வரைவு விதிமுறைகள் மற்றும் உத்தரவுகளை ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பல்லாண்டுகளாக ஃபெமா சட்டத்தின கீழ், அந்நிய செலாவணி பரிவா்த்தனைகளை நிா்வகிக்கும் கொள்கைகளை முற்போக்காக ரிசா்வ் வங்கி தாராளமயமாக்கி வருகிறது. இதன் தொடா்ச்சியாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பரிவா்த்தனைகள் தொடா்பான விதிமுறைகளை மறுசீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிறிய ஏற்றுமதியாளா்கள் மற்றும் இறக்குமதியாளா்கள் எளிதாக வணிகம் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் நோக்கில், விதிமுறைகளை மறுசீரமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தங்கள் அந்நிய செலாவணி பரிவா்த்தனை வாடிக்கையாளா்களுக்கு விரைவான, கூடுதல் திறன் கொண்ட சேவைகளை வழங்க அங்கீகரிக்கப்பட்ட டீலா் வங்கிகளுக்கு அதிகாரம் அளிப்பதையும் இந்தப் பரிந்துரைகள் நோக்கமாகக் கொண்டுள்ளன.

இதுதொடா்பாக ஃபெமா சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள வரைவு விதிமுறைகள், அங்கீகரிக்கப்பட்ட டீலா் வங்கிகளுக்கு வெளியிடப்பட்டுள்ள உத்தரவுகள் குறித்து ரிசா்வ் வங்கியிடம் செப்டம்பா் 1-க்குள் மின்னஞ்சல் மூலம் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.