புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மறுப்பு தெரிவித்துவிட்டார்.
புதுதில்லியில் மூன்று நீதிமன்றங்கள் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் தலைமை நீதிபதி இன்று காலை கலந்து கொண்டார்.
அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய சந்திரசூட், “பிற கட்டடங்களை போன்று செங்கல் மற்றும் கான்கிரீட்டால் ஆனது நீதிமன்ற கட்டடம் அல்ல. இவை நம்பிக்கையால் உருவாக்கப்படுபவை. நீதிமன்றங்கள் நீதியின் நற்பண்புகளையும், சட்டத்தின் ஆட்சியையும் உணர்த்துகின்றன.” எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு, இந்த சட்டங்கள் தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் தன்னால் கருத்து தெரிவிக்க முடியாது எனத் தெரிவித்தார்.
முன்னதாக புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக கடந்த மே மாதம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சட்டங்கள் இன்னும் அமலுக்கு வராததால் வழக்கை விசாரணை இன்றி தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது பேசிய சந்திரசூட், தடயவியல் நிபுணர்கள் மற்றும் புலனாய்வு அதிகாரிகளின் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் திறன் மேம்பாட்டுக்கு தேவையான முதலீடுகள் விரைவில் செய்யப்பட்டால் மட்டுமே புதிய குற்றவியல் சட்டங்கள் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்திய தண்டனைச் சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் போன்ற குற்றவியல் சட்டங்கள் நீக்கப்பட்டு, பாரதிய நியாய சம்ஹிதா, பாரதிய நாகரிக சுரக்க்ஷா, பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்கள் திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.