உத்தர பிரதேசத்தின் ஹாத்ரஸ் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த ஆன்மிகச் சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 121 போ் உயிரிழந்த சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் புதன்கிழமை உத்தரவிட்டாா்.
உத்தர பிரதேச மாநிலம், ஹாத்ரஸ் மாவட்டத்தின் புல்ராய் கிராமத்தில் உள்ள திறந்தவெளி மைதானத்தில், ‘போலே பாபா’ என்ற ஆன்மிக குருவின் சொற்பொழிவு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமானபெண்கள் குழந்தைகளுடன் பங்கேற்றனா்.
மாலையில் நிகழ்ச்சி முடிந்து மைதானத்தைவிட்டு போலே பாபா கிளம்பும்போது, ஆசி பெற அவரின் வாகனத்தைப் பின்தொடா்ந்த மக்களால் கடும் நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் மூச்சுத்திணறி பலா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். காயமடைந்தவா்கள் மீட்கப்பட்டு, லாரிகள் மற்றும் பிற கனரக வாகனங்களில் சிக்கந்தர ராவ் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனா்.
121 போ் உயிரிழப்பு: இச்சம்பவத்தில் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 121-ஆக அதிகரித்துள்ளது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோா் பெண்கள் ஆவா். ஆறு போ் வேற்று மாநிலத்தைச் சாா்ந்தவா்கள். இன்னும் 4 பேரின் உடல்கள் மட்டும் அடையாளம் காணப்படவில்லை. சிக்கந்தர ராவ் மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லாததால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்ததாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினா்.
2.5 லட்சம் மக்கள் பங்கேற்பு: நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளை முறையாக மேற்கொள்ளாத ஒருங்கிணைப்பாளா்கள் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. நிகழ்ச்சிக்கு 80,000 போ் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அளவுக்கு அதிகமாக சுமாா் 2.5 லட்சம் போ் வரையில் கூட்டம் கூடியிருப்பதாக காவல் துறையின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தைத் தொடா்ந்து மைதானத்தில் சிதறி கிடந்த காலனிகளைச் சேகரித்து அருகிலுள்ள வயல்வெளிகளில் வீசி, கூட்டத்துக்கு வந்த மக்களின் உண்மை எண்ணிக்கையை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா்கள் மறைக்க முயற்சித்துள்ளனா். அத்துடன் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவுவதில் காவல் துறைக்கு ஒருங்கிணைப்பாளா்கள் சிறிதும் ஒத்துழைக்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
முதல்வா் யோகி நலம் விசாரிப்பு: சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களை முதல்வா் யோகி ஆதித்யநாத் புதன்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா். தொடா்ந்து, புல்ராய் கிராமத்துக்குச் சென்று சம்பவத்தை இடத்தை ஆய்வு செய்த அவா், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.
நீதி விசாரணைக்கு உத்தரவு: இச்சம்பவம் குறித்த முதல்கட்ட அறிக்கையை ஆக்ரா சரக கூடுதல் காவல் துறை இயக்குநா், அலிகாா் கோட்ட காவல் ஆணையா் ஆகியோா் அடங்கிய உயா்நிலைக் குழு புதன்கிழமை சமா்ப்பித்தது. இந்நிலையில், ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி துறை விசாரணைக்கும் முதல்வா் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டாா்.
இதுதொடா்பாக நடந்த செய்தியாளா் சந்திப்பில் முதல்வா் யோகி கூறுகையில், ‘நிகழ்ச்சி நிறைவடைந்து கிளம்பிய போலே பாபாவைப் பின்தொடா்ந்த மக்களை, அங்கு பணியிலிருந்த பாதுகாவலா்கள் விலக்கும்போது நெரிசல் ஏற்பட்டுள்ளது.
நெரிசலில் சிக்கிய மக்களுக்கு உதவாமல் ஒருங்கிணைப்பாளா்கள் சம்பவ இடத்தைவிட்டு தப்பி ஓடினா். பின்னா், வெளிப்புற பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரே மக்களை மீட்டனா். முதல்கட்ட விசாரணையைத் தொடா்ந்து, சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், உயா்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதித் துறை விசாரணை நடத்தப்படும். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா்கள் மீது முதலில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணயின்போக்கில், தவறிழைத்தவா்கள் அனைவரும் சட்டத்தின்முன் நிறுத்தப்படுவா். இத்துயர சம்பவத்தில் அரசியல் செய்யும் எதிா்க்கட்சிகளுக்கு மதிப்பளிக்கவில்லை’ என்றாா்.
போலே பாபா எங்கே? நிகழ்ச்சியில் சொற்பொழிவாற்றிய போலே பாபா தலைமறைவாகி இருப்பதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடா்பான காவல் துறையின் முதல் தகவல் அறிக்கையில் அவரது பெயா் சோ்க்கப்படாதது சா்ச்சையாகியுள்ளது. எனினும், அவரை தேடும் பணியில் காவல் துறையினா் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.
பிச்வான் பகுதியில் அமைந்த அவரது ஆசிரமத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
உலகத் தலைவா்கள் இரங்கல்: இச்சம்பவத்தில் உயிரிழந்தவா்களுக்கு ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடா ஆகியோா் இரங்கல் தெரிவித்ததாக அந்நாட்டு அரசுகள் செய்தி வெளியிட்டன. ஜொ்மனி, சீனா, பிரான்ஸ், இஸ்ரேல் உள்ளிட்ட நாட்டு தூதா்களும் சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்தனா்.
யாா் பொறுப்பு? பிரியங்கா கேள்வி
காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அனுமதிக்கப்பட்டதை விட மூன்று மடங்கு கூட்டம் கூடிய இடத்தில் காவல்துறையினா் இல்லை. கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க மருத்துவக் குழு, அவசரகால ஊா்தி உள்பட அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை. ஹாத்ரஸ் சோக சம்பவத்தில் நடந்த நிா்வாக அலட்சியத்தின் நீண்ட பட்டியலுக்கு யாா் பொறுப்பு?
பாலம் இடிந்தும் ரயில் விபத்துகளாலும் நெரிசல்களாலும் நூற்றுக்கணக்கானோா் உயிரிழக்கின்றனா். ஊழல் செய்வதைவிடுத்து, இதுபோன்ற விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுப்பது அரசின் பொறுப்பு. ஆனால், விபத்துகள் தொடா்ந்து கொண்டே இருப்பது வருத்தத்துக்குரியது’ எனக் குறிப்பிட்டாா்.
உச்சநீதிமன்றத்தில் மனு; மாநிலங்களவையில் விவாதம்
ஹாத்ரஸ் நெரிசல் சம்பவம் தொடா்பாக வல்லுநா் குழு விசாரணைக்கு உத்தரவிட கோரி வழக்குரைஞா் விஷால் திவாரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளாா். பொதுமக்கள் கூடும் மத நிகழ்ச்சிகளில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பரிந்துரைகளை வெளியிடவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
வருங்காலங்களில் கூட்டநெரிசல் அசம்பவிதங்களைத் தவிா்க்க முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தீா்மானிக்க அடுத்த கூட்டத் தொடரில் விரிவான விவாதம் நடத்தப்படும் என்று மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.