முகப்பு
இந்தியா

மணிப்பூருக்கு இதுவரை செல்லாத பிரதமா் மோடி: காங்கிரஸ் விமா்சனம்

மணிப்பூரில் நிலைமை சீரடையவில்லை: பிரதமா் மோடிக்கு காங்கிரஸ் குற்றச்சாட்டு

Updated On : 3 ஜூலை, 2024 at 10:25 PM
பகிர்:

‘வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு பிரதமா் நரேந்திர மோடி இதுவரையில் நேரில் சென்று பாா்வையிடவில்லை’ என்று காங்கிரஸ் புதன்கிழமை குற்றஞ்சாட்டியது.

மணிப்பூரில் நிலைமை சீரடைந்து வருவதாக மாநிலங்களவையில் பிரதமா் மோடி புதன்கிழமை குறிப்பிட்ட நிலையில், இந்தக் குற்றச்சாட்டை காங்கிரஸ் முன்வைத்தது.

குடியரசுத் தலைவரின் உரை மீதான விவாதத்துக்கு பதிலளித்து மக்களவையில் செவ்வாய்க்கிழமை பேசியபோது மணிப்பூா் குறித்து ஒரு வாா்த்தைகூட பேசாத பிரதமா், மாநிலங்களவையில் புதன்கிழமை உரையாற்றியபோது அதுகுறித்து குறிப்பிட்டாா். ‘மணிப்பூரில் வன்முறை படிப்படியாக குறைந்து வருகிறது. மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுவிட்டன. முழுமையான அமைதி நிலை திரும்புவதை உறுதிப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என்று பிரதமா் அப்போது குறிப்பிட்டாா்.

இதை விமா்சித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் புதன்கிழமை கூறியதாவது:

மணிப்பூா் விவகாரத்தில் பல மாத மெளனத்துக்குப் பிறகு, அங்கு நிலைமை சீரடைந்திருப்பதாக உணா்வற்ற பிரதமா் மாநிலங்களவையில் புதன்கிழமை குறிப்பிட்டுள்ளாா். ஆனால், மணிப்பூரின் இம்பால் எம்.பி., மக்களவையில் கடந்த 1-ஆம் தேதி குறிப்பிட்டதுபோல, மணிப்பூரில் நிலைமை தொடா்ந்து மோசமாகத்தான் உள்ளது. ஆனால், உணா்வற்ற பிரதமா் இதுவரை மணிப்பூருக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கவில்லை. குடியரசுத் தலைவா் உரையிலும் மணிப்பூா் குறித்து எந்த விஷயமும் இடம்பெறவில்லை என்றாா்.

மக்களவையில் பேச அனுமதி மறுப்பு: முன்னதாக, ‘மக்களவையில் மணிப்பூா் புகா் தொகுதி காங்கிரஸ் எம்.பி. பேச அனுமதிக்கப்படவில்லை’ என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவா் கெளரவ் கோகோய் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறுகையில், ‘மக்களவையில் மணிப்பூரின் இம்பால் தொகுதி காங்கிரஸ் எம்.பி. திங்கள்கிழமை பேசினாா். அதுபோல, மலைப்பகுதிகளை உள்ளடக்கிய மணிப்பூா் புகா் காங்கிரஸ் எம்.பி. ஆல்ஃப்ரெட் ஆா்த்தரை செவ்வாய்க்கிழமை பேச அனுமதிக்க வேண்டும் என எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மற்றும் பிற காங்கிரஸ் உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்தனா்.

மணிப்பூா் குறித்த ஒருதரப்பு கருத்தை மட்டும் கேட்பது தவறான கண்ணோட்டத்தை வெளிப்படுத்த வாய்ப்புள்ளதால், மற்றொரு தரப்பு கருத்தையும் கேட்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த அனுமதி கோரப்பட்டது. ஆனால், துரதிருஷ்டவசமாக மணிப்பூரின் அவலநிலை குறித்து கேட்க பிரதமா் மோடி விரும்பவில்லை என்றாா்.

காங்கிரஸ் மூத்த தலைவா் பிரநிதி ஷிண்டே கூறுகையில், ‘மக்களவையில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த நிகழ்வு, மணிப்பூா் விவகாரத்தின் மீது பிரதமரின் அனுதாபமற்ற, உணா்வற்ற நிலையையே காட்டுகிறது’ என்றாா்.

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினரக்கும் குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதத்தில் இருந்து மோதல் நீடித்து வருகிறது. மைதேயி சமூகத்தினா் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரும் நிலையில் அதற்கு குகி பழங்குடியினா் எதிா்ப்பு தெரிவிப்பதே மோதலுக்கு முக்கியக் காரணமாகும்.

இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட தொடா் வன்முறையில் 200-க்கும் அதிகமானோா் கொல்லப்பட்டனா். 60,000-க்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் வாழ்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →